

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, நேபாளத்துக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரிட்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நவாஸ் ஷெரீப், நேபாளம் மற்றும் இந்தியாவில் நிலநடுக்கத்தால் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தானும் பாகிஸ்தான் மக்களும் உறுதுணையாக இருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான தருணத்தில் இரு நாடுகளுக்கும் தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும், இதுதொடர்பாக அந்தந்த அரசுகளை தொடர்பு கொள்ளுமாறு இரு நாடுகளிலும் உள்ள தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம் பாகிஸ்தானிலும் லேசாக உணரப்பட்டது. எனினும், அங்கு உயிருக்கோ, உடைமைகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.