

உக்ரைனில் அரசுப் படைகளுக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் அண்மைகாலமாக அதிக அளவில் மீறப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு மீண்டும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
உக்ரைன் அரசுக்கு எதிராக கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளின் முயற்சியால் கடந்த பிப்ரவரியில் இருதரப்புக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில் எல்லையோர பகுதியான டோன்ஸ்க் நகரில் இருந்து கிளர்ச்சியாளர்கள் பீரங்கி குண்டுகளை வீசி வருவதாக அரசுப் படைகள் குற்றம் சாட்டியுள்ளன. இதை மறுத்துள்ள கிளர்ச்சிப் படை, உக்ரைன் ராணுவம்தான் தங்கள் பகுதிகளில் ஏவுகணைகளை வீசி வருகிறது என்று தெரிவித்துள்ளது.
இருதரப்பினரும் ஒருவரை யொருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில் அண்மைகாலமாக சண்டை நிறுத்தம் அதிக அளவில் மீறப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த இரு நாள்களில் மட்டும் 46 முறை எல்லையில் பீரங்கி குண்டுகள் வீசப்பட்தாகக் கூறப்படுகிறது. இதனால் உக்ரைனில் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கிளர்ச்சிப் படைகளுக்கு ரஷ்யா ஆயுத உதவி அளிப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு மீண்டும் உள்நாட்டுப் போர் மூண்டால் அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் மிகப் பெரிய விரிசல் ஏற்படும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவம் அதிக அளவில் குவிக்கப்படுகிறது. இது ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவான நடவடிக்கை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.