Last Updated : 26 Apr, 2015 12:03 PM

 

Published : 26 Apr 2015 12:03 PM
Last Updated : 26 Apr 2015 12:03 PM

எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன் - 3

இஸ்லாமின் இரு பிரிவினருக்குமிடையே வேறொரு வேறுபாடும் உண்டு. நபிகள் நாயகத்தின் பேரனான உசேன் இறந்த தினத்தை ஆஷுரா தினம் (மொஹர்ரம்) என்று அனைத்து முஸ்லிம்களும் கருதி துக்கம் அனுஷ்டிக்கிறார்கள். ஆனால் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இது மேலும் முக்கிய தினம். நபிகள் நாயகத்தின் ரத்தவாரிசு ஒருவர் இறந்த தினம். எனவே அந்த தினத்தில் அந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் மார்பில் அடித்துக் கொண்டு அழுவது, தன்னையே சாட்டையால் அடித்துக் கொண்டு துன்புறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

அவர்களைப் பொருத்தவரை இது துக்கத்தின் வெளிப்பாடு. ஆனால் சன்னி பிரிவினர் இந்தச் செயல்பாடுகளை அங்கீகரிப்பதில்லை. சொல்லப் போனால் சில (சன்னிக்கள் ஆட்சி செய்யும்) நாடுகளில் இதுபோன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. சரி, இஸ்லாமிய மார்க்கத்தின் இந்த இரண்டு பிரிவுகளுக்கும் ஏமனில் நடைபெறும் கலவரங்களுக்கும் என்ன தொடர்பு?

ஏமனை ஆட்சி செய்பவர் (செய்தவர்?) சன்னி பிரிவைச் சேர்ந்தவர். இந்த ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர்கள் ஹவுதி என்னும் பிரிவினர். ஹவுதிக்கள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். யார் இந்த ஹவுதிக்கள் என்பதைச் சற்று விரிவாகப் பார்க்கலாமா?

ஹவுதிக்கள் என்று பரவலாக அழைக்கப்படும் இந்தப் பிரிவினரின் உண்மையான பெயர் அன்சர் அல்லா. 2004ல் ஒரு பெரும் தாக்குதல் உசேன் அல் ஹவுதி என்பவரின் தலைமையில் அரசின் மீது நிகழ்த்தப்பட்டது. இதன் காரணமாக ஏமன் நாட்டின் ராணுவத்தினர் பலரும் கொல்லப்பட்டார்கள். இந்த ஹவுதி என்பவரின் பெயரில்தான் அந்தப் பிரிவினர் அழைக்கப்படுகிறார்கள்.

உசேன் அல் ஹவுதி ஏமன் நாட்டு ராணுவத்தால் 2004 இறுதியில் கொல்லப்பட்டார். அவர் குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்து ஐந்து கிளர்ச்சிகளில் ஈடுபட்டார்கள். ஒருவழியாக 2010-ல் அரசுடன் அமைதிக்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆனாலும் அமைதி நிலவவில்லை.

2014ல் அப்துல் மாலிக் அல் ஹவுதி என்பவரின் தலைமையில் ஒரு குழு ஏமன் ஆட்சியாளர்களை சூழ்ந்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்றது. அதில் ஓரளவு வெற்றியும் கிட்டியது. நாட்டின் பாராளுமன்றம் மட்டுமல்ல, தலைநகர் சனா முழுவதுமே கூட ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றது. இந்தப் பிரிவில் பெரும்பாலானவர்கள் வட ஏமனைச் சேர்ந்தவர்கள்.

சனாவை கைப்பற்றிய பிறகு ஹவுதிக்கள் பலவிதங்களில் முன்னேற திட்டமிட்டனர். தெற்குப் பகுதியில் உள்ள அடெல் என்ற நகரை அடைந்தார்கள். அங்கிருந்து கொண்டே ஒரு மாற்று அரசை நிர்ணயித்தார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அவர்கள் செய்த அறிவிப்புகள் இவை. ‘’சீக்கிரமே ஏமன் நாட்டின் பாராளுமன்றம் கலைக்கப்படும். எங்களின் தாற்காலிக அரசு உருவாக்கப்படும். ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட எங்கள் தலைமைக் குழுதான் அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஏமனை ஆட்சி செய்யும். மற்றதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’’.

இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்டனர். தானாக முன்வந்து இந்த ராஜினாமாக்கள் அளிக்கப்படவில்லை. அதிபர் மற்றும் பல பிரபலங்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். வேறு வழியில்லாமல் அவர்கள் ராஜினாமா செய்யும்படி ஆனது.

ஆனால் ஹவுதிக்களின் அறிவிப்பை சன்னி பிரிவினர் ஏற்கத் தயாராக இல்லை. அவர்களைப் பொருத்தவரை அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பிரிவுதான் ஷியா (அல்லது ஹவுதி). அவர்கள் எப்படி மொத்த நாட்டையும் ஆள முடியும்? எனவே தெற்கு ஏமன் தலைவர்களும் நாட்டில் உள்ள சன்னி பிரிவினரும் பதிலுக்கு ஹவுதி பிரிவினரை கடுமையாக எச்சரித்தனர்.

இருதரப்புக்குமே நடந்த உள்நாட்டுப் போரில் அதிபர், கடந்த பிப்ரவரி மாதம் சனாவை விட்டு வெளியேறினார். ஏமன் நகரிலுள்ள ராணுவத்தினர் இரண்டாகப் பிரிந்திருக்கின்றனர். ஆளுக்கு ஒரு பிரிவை ஆதரிக்கிறார்கள்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x