

நேபாளம் மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் நேற்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் அடுத்தடுத்த நில அதிர்வுகளும் ஏற்பட்டன.
நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 2,500-ஐ தாண்டி உள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.
நேபாளத்தில் நேற்று முன்தினம் காலை 11.41 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.9 ஆக பதி வானது. தலைநகர் காத்மாண்டில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் உள்ள லாம்ஜங் பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், வட இந்தியா, வங்கதேசம், திபெத், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நிலஅதிர்வுகள் ஏற்பட்டன.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 12.42 மணிக்கு மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் மையம் கொண் டிருந்த இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவானது. 30 விநாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம், மேற்குவங்கம், பிஹார், அசாம், ஜார்க்கண்ட், ஒடிஸா, உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அடுத்து, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முடுக்கி விடுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில் நேபாளத்துக்கு இந்தியாவிலிருந்து சென்ற மீட்புப் படையினர், உள்ளூர் அதிகாரி களுடன் ஒருங்கிணைந்து நிவா ரணப் பணிகளை கவனிப்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படை தலைவர் ஓ.பி.சிங் நேபாளம் விரைந்துள்ளார்.
ஏற்கெனவே காத்மாண்டுக்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் 7 தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து மேற்பார்வை பணி களை அவர் மேற்கொள்வார்.
இதனிடையே நேற்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் காத்மாண்டுக்கு அனுப்பி வைக்கப்படும் நிவாரண உதவிகள் மாலை 4 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர் அதிர்வுகள் காரணமாக விமான நிலைய ஊழியர்கள் வெளி யேறியதால் காத்மாண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விமானங் கள் காத்மாண்டில் தரையிறங்க வில்லை.
இந்தியாவிலிருந்து சென்ற 18 பேர் அடங்கிய 14 வயதுக்கு உட்பட் டோருக்கான கால்பந்து குழுவினர் நேபாளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டுவர முன்னுரிமை கொடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நிலநடுக்கம் காரணமாக பலியானவர்கள் எண் ணிக்கை 2,500-ஐ தாண்டி உள்ளது. இந்தியாவில் மட்டும் உயிரிழந் தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந் துள்ளது. 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, “நிலநடுக்கத்தால் பிஹார் மாநிலத்தில் மட்டும் அதிகபட்சமாக 46 பேரும் உத்தரப் பிரதேசத்தில் 13 பேரும், மேற்குவங்கத்தில் 2 பேரும், ராஜஸ்தானில் ஒருவரும் பலியாகி உள்ளனர். பிஹாரில் 133 பேரும், உ.பி.யில் 69 பேரும், மேற்குவங்கத்தில் 35 பேரும் காயமடைந்தனர்” என்றார்.
மத்திய அமைச்சரவை செய லாளர் அஜித் சேத் தலைமையிலான தேசிய அவசரகால மேலாண்மை மையம் நேற்று கூடி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியது. இதில் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள், அமைச்சரவை செயலகம், உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தலா ரூ.6 லட்சம் நிவாரணம்
இந்தியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு தலா ரூ.6 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் ரூ.2 லட்சம் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்தும் ரூ.4 லட்சம் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும் வழங்கப்பட உள்ளது.
இதுதவிர, பிஹாரில் நிலநடுக் கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நிதிஷ் குமார் கூறும்போது, “இக்கட்டான இந்த நேரத்தில் அனைவரும் அமைதி காக்க வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் யாரும் தவறான தகவலையோ வதந்தியையோ பரப்ப வேண்டாம். மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அரசு அதிகாரிகள் பொது இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இன்று முதல் 2 நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படும்” என்றார்.
விரைந்து உதவி செய்த இந்தியா
நிலநடுக்கத்தால் பேரழிவுக்கு உள்ளான நேபாளத்துக்கு குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மனிதாபி மான அடிப்படையில் இந்தியா விரைந்து அனுப்பி உதவி செய்து வருவதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி அருப் ராஹா தெரிவித்தார்.
மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மத் திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது.
இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, நேபாளத்தில் சிக்கியுள்ள வெளி நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நல்லெண்ண விசா வழங்கி அவர்களை விரைவாக மீட்க உதவும்படி குடியேற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
நேபாளத்தில் உள்ளூர் அதிகாரி களுக்கு உதவுவதற்காக, தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த மேலும் 300 பேரை அனுப்ப ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். ஏற்கெனவே நேற்று முன்தினம் 460 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நேபாளத்தில் மின்சாரம், தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக தடைபட்டுள்ளது, மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. சடலங்களை வைக்கக்கூட இடம் இல்லை என்று ஆக்ஸ்பாம் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாகி ஹெலன்சோக் தெரிவித்தார்.