

தன் கட்டுப்பாட்டிலுள்ள திபெத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தில் சுரங்கப்பாதை அமைத்து நேபாளத்துக்கு சுமார் 540 கி.மீ தொலைவுள்ள ரயில்பாதை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகள் மீது செல்வாக்கை அதிகரிக்கும் சீனாவின் இம்முயற்சி இந்தியா வுக்கு எச்சரிக்கை மணியாகக் கருதப்படுகிறது.
இதுதொடர்பாக சீன அரசுப் பத்திரிகையில், “தற்போதுள்ள குயின்காய்-திபெத் ரயில்வே பாதையை சீனா-நேபாள எல்லை வரை திபெத் வழியாக நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது, நேபாளம்-சீனா இடையேயான இருதரப்பு வர்த்தகம், சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்த உதவும்” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த ரயில்பாதை 2020-ம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கான திட்டமதிப்பீடு குறித்து அறிவிக்கப்படவில்லை.
குயின்காய்-திபெத் ரயில் பாதை திபெத் தலைநகர் லாஸாலை சீனாவின் பிற பகுதி களுடன் இணைக்கிறது. இப் பாதை 1,956 கி.மீ. நீளமுள்ளது.
இத்திட்டம் குறித்து சீன பொறி யியல் அகாடமியின் ரயில்பாதை நிபுணர் வாங் மெங்சு கூறும்போது, “இத்திட்டம் தொடங்கப்பட்டால், ஏராளமான சிக்கல்களை பொறியாளர்கள் எதிர்கொள்வர். எவரெஸ்ட் சிகரத்தின் அடியில் இப்பாதை அமைய உள்ளதால், பணியாளர்கள் மிக நீண்ட சுரங்கம் தோண்ட வேண்டியிருக்கும்.
இத்திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், இருதரப்பு வர்த்தகம், குறிப்பாக வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு அதிக பயன் கிடைக்கும். மேலும், சுற்றுலாவும் மேம்படும். நேபாளத்தின் வேண்டுகோளை ஏற்று இப்பணி தொடங்கப்படுகிறது. இதற்கான ஆயத்தப்பணிகளை சீனா தொடங்கிவிட்டது” என்றார்.
இமயமலைப்பகுதியில் அமை யும் இப்பாதையில் ரயில்கள் அதிகபட்சம் 120 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்.
நேபாள அதிபர் ராம்பரண் யாதவ் திபெத்துக்கு கடந்த மாதம் சென்றார். அப்போது அவரிடம் திபெத் தன்னாட்சிப் பகுதியின் தலைவர் லோசங் ஜாம்கன், நேபாள எல்லையில் உள்ள கெர்முக் பகுதி வரை திபெத் ரயில் பாதையை நீட்டிக்க சீனா திட்ட மிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் பாதை
நேபாளம் தவிர, திபெத் ரயில் பாதையை பூடான் மற்றும் இந்தியா வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாக சீனா ஏற்கெனவே அறிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ நேபாள சுற்றுப் பயணத்தின்போது, காத்மாண்டு மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளுக்கு ரயில் பாதை நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
சீன சமகால சர்வதேச உறவு நிறுவன இயக்குநர் ஹு ஷிசெங் கூறும்போது, “உள்ளூர் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே இந்த ரயில் பாதை நீட்டிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
திபெத்தியர்கள் நேபாளம் வழியாக இமாச்சலப் பிரதேசத் திலுள்ள தலாய் லாமைவைச் சந்தித்து வருவதால் இந்தியா மீது அதிருப்தியடைந்துள்ள சீனா நேபாளத்துடன் சீனா தனது உறவை வலுப்படுத்தி வருகிறது.
நேபாளத்துக்கு அளித்து வரும் ஆண்டு நிதியுதவியை சீனா 2.4 கோடி அமெரிக்க டாலரிலிருந்து (சுமார் ரூ.150 கோடி), 12.8 கோடி அமெரிக்க டாலர்களாக (சுமார் ரூ.800 கோடி) உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.