Published : 24 Apr 2015 07:24 PM
Last Updated : 24 Apr 2015 07:24 PM

என் குடும்பமே கைதாகலாம்: மகிந்த ராஜபக்ச அச்சம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச தனது உடல்நிலையை காரணம் காட்டி சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற கோரினார். அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால் தற்போது அவர் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை மகிந்த ராஜபக்ச இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின் நிருபர்களிடம் அவர் கூறும்போது, "அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஆட்சியில் எனது குடும்பத்தினர் வேட்டையாடப்படுகின்றனர். முதல்கட்டமாக பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்து கோத்தபய ராஜபக்ச கைதாகக்கூடும். அதன்பிறகு நான், எனது மகன்கள் நமல், யோஷிதா ஆகியோரும் கைது செய்யப்படலாம்" என்றார்.

இலங்கையில் கடந்த ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முன்னாள் அதிபர் ராஜபக்ச குடும்பத்தினரின் பல்வேறு ஊழல் விவகாரங்கள் அம்பலமாகி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச வீட்டு வசதி திட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு சகோதரர் கோத்தபய ராஜபக்சவிடம் ஆயுத கொள்முதல் ஊழல் விவகாரம் தொடர்பாக அந்த நாட்டு ஊழல் தடுப்பு விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.

மேலும், மகிந்த ராஜபக்சவிடம் விரைவில் ஊழல் தடுப்பு விசாரணை ஆணையம் விசாரணை நடத்தும் என்று தெரிகிறது. இவர்கள் தவிர ராஜபக்சவின் மனைவி, மகன்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x