Published : 05 Apr 2015 12:28 PM
Last Updated : 05 Apr 2015 12:28 PM

மரண தண்டனை விதிக்கப்பட்டு 30 ஆண்டு சிறையில் இருந்தவரை விடுவித்தது அமெரிக்க நீதிமன்றம்: போதிய ஆதாரம் இல்லாததால் நடவடிக்கை

அமெரிக்காவில் இரட்டைக் கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையிலிருந்த மரண தண்டனைக் கைதி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி அந்நாட்டு நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது. இதையடுத்து, சிறையிலிருந்து விடுதலையான அவரை அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் ஆரத் தழுவி வரவேற்றனர்.

கடந்த 1985-ம் ஆண்டு பர்மிங்ஹாம் மற்றும் அலபமா ஆகிய இடங்களில் உள்ள இரண்டு வெவ்வெறு உணவகங்களில் வழிப்பறி கொள்ளை நடைபெற்றது. அப்போது, அந்த உணவகங்களைச் சேர்ந்த இரு மேலாளர் பலியாயினர். இந்த வழக்கில் நேரில் பார்த்த சாட்சியையோ, கை ரேகை ஆதாரத்தையோ போலீஸாரால் திரட்ட முடியவில்லை.

அதே ஆண்டில் மற்றொரு உணவகத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது அவர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த உணவகத்தின் மேலாளர் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து அவர், அலபமா மாகாணத்தைச் சேர்ந்த அந்தோனி ரே ஹிண்டன் என்பவரை குற்றவாளி என்று அடையாளம் காட்டி உள்ளார்.

இதன் அடிப்படையில் ஹிண்டனை போலீஸார் கைது செய்தனர். அப்போது அவருக்கு வயது 29. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த அவர், சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அந்த இடத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் வேலை செய்து கொண்டிருந்ததாகக் கூறியுள்ளார்.

மேலும் ஹிண்டனின் தாயாரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸார், மேற்கண்ட மூன்று தாக்குதலுக்கும் இந்த துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டது எனக் கூறினர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் ஹிண்டனுக்கு மரண தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஹிண்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அதை விசாரித்த நீதிமன்றம், ஹிண்டனின் வாதத்தை முன்வைக்க போதுமான வாய்ப்பு வழங்கவில்லை எனக்கூறி தண்டனையை நிறுத்தி வைத்தது. அத்துடன் மீண்டும் விசாரிக்குமாறு ஜெபர்சன் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஹிண்டனுக்கு ஆதரவாக சமநீதி அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரியன் ஸ்டீவன்சன் வாதாடினார். விசாரணையில் ஹிண்டனின் தாயாரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிக்கும் கொலை சம்பவங்களுக்கும் தொடர்பில்லை என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும், கொலை நடந்தபோது ஹிண்டன் ஒரு நிறுவனத்தில் வேலை செய்ததை அதன் மேலாளர்கள் உறுதி செய்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லாரா பெட்ரோ, ஹிண்டன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி அவரை விடுதலை செய்யுமாறு கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x