

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் இடிக்கப்பட்ட இந்து கோயில் ஒன்றை மீண்டும் கட்டித்தர அந்த மாகாண அரசுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைபர் பக்துன்கவா மாகாணம், தேரி கிராமத்தில், ஸ்ரீபரம்ஹன்ஸ் ஜி மகராஜ் என்ற துறவி 1919-ம் ஆண்டு இறந்தார். இவர் இறந்த இடத்தில் கோயில் ஒன்று கட்டப்பட்டது.
இதில் இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் 1997-ல் முஸ்லிம் பழமைவாதிகளால் இந்தக் கோயில் இடிக்கப்பட்டது. இந்த இடத்தை ஆக்கிரமித்த உள்ளூர் இஸ்லாமிய மதத் தலைவர் ஒருவர், பின்னர் அந்த இடத்தை காலி செய்ய மறுத்துவிட்டார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் இந்துக் கோயில்களில் புனிதத் தன்மையை கெடுக்கும் வகையில் விஷமச் செயல்கள் அடிக்கடி நடப்பது தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இந்து எம்.பி. ரமேஷ்குமார் வன்கவானி சமீபத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அப்போது தேரி கிராமத்தில் இந்து கோயில் இடிக்கப்பட்டதை யும் அவர் நீதிமன்றத்தின் கவன துக்கு கொண்டு சென்றார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி நாசிர் உல் முல்க் தலைமையிலான 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது. அப்போது பாகிஸ்தான் அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாக்கர் அகமது “இந்தப் பிரச்சினையில் சுமுகத் தீர்வு காண அரசு முயன்று வருகிறது” என்றார்.
தொடர்ந்து இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “தேரி கிராமத்தில் இடிக்கப்பட்ட கோயிலை மீண்டும் கட்டித்தந்து அதை பாதுகாக்க வேண்டும்” என கைபர் பக்துன்கவா மாகாண அரசுக்கு உத்தரவிட்டனர்.