உலக மசாலா: மனிதனின் அறியாமையால் எவ்வளவு பாதிப்பு...

உலக மசாலா: மனிதனின் அறியாமையால் எவ்வளவு பாதிப்பு...
Updated on
2 min read

அறிவியல் புனைகதைகளில் சாத்தியமான விஷயத்தை தற்போது நிஜத்தில் நடத்த இருக்கிறார்கள். ரஷ்யாவைச் சேர்ந்த 30 வயது வலெரி ஸ்பிரிடொனோவ் மிக அரிய மரபணுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். தலை மட்டும் நல்ல நிலையில் வளர்ச்சியடைந்திருக்கிறது. உடல் மிகச் சிறிய அளவில் இருக்கிறது. இந்த நோயால் நாளுக்கு நாள் இவரது உடல் மோசமடைந்து வருவதால் தலை மாற்று அறுவை சிகிச்சை ஆராய்ச்சி மையத்தைத் தொடர்புகொண்டார் வலேரி. மரணம் அடைந்த ஆரோக்கியமான உடலில் இருந்து தலையை நீக்கிவிட்டு, வலேரியின் தலையைச் சேர்ப்பதுதான் இந்த அறுவை சிகிச்சை. செர்ஜியோ கவவெரோ என்ற மருத்துவர் தலைமையில் அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. 36 மணி நேரம் நடைபெறும் அறுவை சிகிச்சையில் 150 மருத்துவர்களும் செவிலியர்களும் பங்கேற்க இருக்கின்றனர். சுமார் 62 கோடி ரூபாய் செலவாக இருக்கிறது. வலேரியிடம் இந்த அறுவை சிகிச்சை குறித்து பயமில்லையா என்று கேட்டால், “அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும் விரைவில் இறந்துபோகத்தான் போகிறேன். ஒருவேளை இந்தச் சிகிச்சையால் நான் பிழைத்துவிட்டால் எனக்கும் மனித குலத்துக்கும் நல்லதுதானே’’ என்கிறார் வலேரி.

இது மட்டும் வெற்றியடைந்தால் மருத்துவம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிவிடும்!

அமெரிக்காவில் உள்ள கொலோரடா ஏரியில் ஆயிரக்கணக்கான தங்கமீன்கள் வாழ்வதால் புதிய பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இந்த ஏரியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்கமீன் வசித்ததில்லை. அருகில் வசிக்கும் யாரோ 4 மீன்களை ஏரியில் விட்டனர். மூன்றே ஆண்டுகளில் 4 ஆயிரம் மீன்களாகப் பெருகிவிட்டன. புதிய தங்கமீன் வருகை, ஏற்கெனவே ஏரியில் வசித்த மீன் இனங்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டது. காலம்காலமாக வசித்து வந்த மீன்கள், வேகமாகக் குறைந்து வருகின்றன. சுற்றுச் சூழல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் மற்ற மீன் இனங்களையும் ஏரியையும் காக்கும் விதத்தில் தங்கமீன்கள் பிடிக்கப்பட்டு, உணவுக்காக வழங்கப்படுகின்றன. செல்லப் பிராணியாக வீட்டில் தங்கமீன்களை வளர்த்துக்கொள்ளலாம். ஆனால் ஏரியில் கொண்டு வந்து போட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்திருக்கிறது அரசாங்கம்.

மனிதனின் அறியாமையால் எவ்வளவு பாதிப்பு…

இங்கிலாந்தில் வசிக்கும் 35 வயது டெப்பி டெய்லருக்கு சமைப்பது என்றால் மிகவும் விருப்பம். ஆனால் சமைத்த உணவுகளை அவர் சாப்பிடுவதில்லை. அவர் சாப்பிடும் ஒரே உணவு மாட்டு இறைச்சி சுவை கொண்ட மான்ஸ்டர் மன்ச் சோள சிப்ஸ்தான்! இவற்றுடன் தேநீரை மட்டும் அடிக்கடி குடிக்கிறார். எனக்குச் சமைக்கப்பட்ட உணவுகளைக் கண்டாலே பிடிக்காது. அதனால் இந்த உணவுப் பழக்கத்துக்கு மாறிவிட்டேன் என்கிறார் டெப்பி. ஒரு நாளைக்கு இரண்டு ஃபேமிலி பாக்கெட்டுகள்தான் இவரின் உணவு. அதிலும் மாட்டிறைச்சி சுவையை மட்டுமே சாப்பிடுகிறார். ஒவ்வொரு முறை கடையில் இருந்து மன்ச் பாக்கெட்டுகளை வாங்கும்போது, வீட்டில் குழந்தைகள் பார்ட்டியா என்று கேட்கிறார்கள் கடைக்காரர்கள். உறவினர்களும் நண்பர்களும் எவ்வளவோ மாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. 11 வயது வரை கண்டதையும் சாப்பிட்டு, உடல் பெருத்த குழந்தையாக இருந்தார் டெப்பி. பிறகு அவருக்கு உணவு சாப்பிட முடியாதபடி ஒரு நோய் வந்துவிட்டது. அப்பொழுது ஆரம்பித்த இந்தப் பழக்கம் 10 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

சே… ஒரு நோய் எப்படி எல்லாம் மாற்றிவிடுகிறது…

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in