

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 10 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் ஒரே நாளில் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பரில் பெங்களூருவில் பணியாற்றிய பொறியாளர் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்பவர் ட்விட்டர் மூலம் ஐ.எஸ். அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக கைது செய்யப்பட்டார்.
இதேபோல பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து ட்விட்டர் மூலம் ஐ.எஸ். அமைப்பில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது.
தற்போது ட்விட்டர் சமூக வலைத்தளத்தை சுமார் 28.8 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 50 கோடிக்கும் மேற்பட்ட தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. அந்த வலைத்தளத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள், தங்கள் இயக்கத்தின் பிரச்சாரம், ஆட்சேர்ப்பு, நிதி திரட்டுதல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி ஒரே நாளில் 10 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள சந்தேகத்தின்பேரில் அந்த கணக்குகள் நிறுத்தி வைக் கப்பட்டன. மேலும் 90 ஆயிரம் கணக்குகள் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவை என்று நிபுணர்கள் எச்சரிக்கை தெரி வித்துள்ளனர்.