

லிபியா கடற்கரைக்கு அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 700 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து இத்தாலி அதிகாரி கள் கூறும்போது, “தெற்கு இத்தாலி யில் உள்ள லம்பெடுசா தீவுக்கு தெற்கே லிபியா கடல் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், மீட்பு பணிகளுக்காக இத்தாலி கடலோர காவல் படையினரும் கடற்படை கப்பல்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் சிக்கிய 28 பேரை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர். காணாமல் போன மற்றவர்களை தேடும் பணி நடை பெற்று வருகிறது. இந்தப் படகில் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகக் கூறப் படுகிறது” என்றனர்.
விபத்து நடைபெற்று 24 மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டதால் விபத்தில் சிக்கியவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு 700-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தால் இது கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த மிகப்பெரிய விபத்தாக இருக்கும். மேலும் இந்த ஆண்டில் மட்டும் இப்பகுதியில் படகு விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,500-ஐ தாண்டும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஐ.நா.வின் அகதிகளுக்கான ஆணையர் (யுஎன்எச்சிஆர்) கார்லொட்டா சமி கூறும்போது, “விபத்தில் சிக்கியவர் கள் அனைவரும் பலியாகி இருப்பார்கள்” என்றார்.
அதிக அளவில் அகதிகளை ஏற்றிச் சென்றதுடன், அருகில் வந்த சரக்குக் கப்பலைப் பார்ப்பதற்காக அவர்கள் அனைவரும் படகின் ஒரு பக்கமாக நகர்ந்ததுமே விபத்துக் குக் காரணம் என கூறப்படுகிறது.
ஆசியா, ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சட்டவிரோதமாக படகில் செல்வதும், படகு விபத்துக் குள்ளாவதும் வாடிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.