Last Updated : 29 Apr, 2015 07:29 PM

 

Published : 29 Apr 2015 07:29 PM
Last Updated : 29 Apr 2015 07:29 PM

நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை: நேபாள பிரதமரிடம் மக்கள் கொந்தளிப்பு

நேபாள பூகம்பத்தை அடுத்து பலி எண்ணிக்கை 6,000-ஐ கடக்கும் நிலையில், அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிய பல்வேறு முகாம்களுக்குச் சென்றார்.

பல முகாம்களில் மக்கள் தங்களுக்கு எந்த ஒரு உதவியும் இதுவரை வந்து சேரவில்லை என்று பிரதமர் சுஷில் கொய்ராலாவிடம் தங்கள் கோபத்தைக் காட்டியதாக அவரே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால், அனைவருக்கும் நிவாரணப்பொருட்கள் கிடைக்க தன்னால் இயன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதிக்கப்பட்டோருக்கு உறுதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சில இடங்களில் தங்க இடமின்றி தெருக்களில் வசிக்கும் மக்களில் பலர் போலீஸுடன் மோதல் மேற்கொண்டு உணவுப்பொருட்கள் மற்றும் குடிநீர் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றுள்ளனர்.

அதேபோல் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வெளியேற பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் மக்கள் வெகுநேரமாக பேருந்துகள் வராததால் ஆத்திரமடைந்தனர். இங்கும் போலீஸுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இன்னும் தொலைதூர மலைப்பகுதிகளுக்கு மீட்புப் படையினர் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் கனமழை மற்றும் நிலச்சரிவுகளின் காரணமாக இப்பகுதிகளுக்கு நிவாரணப்பொருட்களைக் கொண்டு செல்ல முடியவில்லை.

இந்நிலையில், இந்திய மீட்புப் படையினர் நேபாளத்தின் இரண்டு முக்கியப் பகுதிகளில் தங்கள் பணிகளைத் தொடங்கியுள்ளனர். காத்மாண்டு மற்றும் கோர்க்கா மாவட்டம் ஆகிய இடங்களில் இந்திய மீட்புப் படையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக 500 பேர் அங்கு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காத்மண்டுவில் ஓரளவுக்கு இயல்பு வாழ்க்கை திரும்பியிருந்தாலும், பூகம்பத்துக்கு பிந்தைய நோய் பரவுதலைத் தடுத்தல், மறுவாழ்வு போன்ற விவகாரங்களில் நேபாளம் பெரிய சவாலைச் சந்திக்கும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x