

நோபல் பரிசு வென்ற ஜெர்மன்எழுத்தாளர் குந்தர் கிராஸ் காலமானார். அவருக்கு வயது 87.
பெர்லினில் உள்ள லியூபெக் மருத்துவமனையில் இன்று (திங்கட்கிழமை) அவர் உயிர் பிரிந்ததாக ஸ்டெய்டில் பப்ளிஷிங் ஹவுஸின் செய்தித் தொடர்பாளர் மத்தியாஸ் வெக்னர் தெரிவித்தார். அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மன் பண்பாட்டை தூக்கி நிறுத்தியதில் இவரது எழுத்துகள் செய்த பங்களிப்புகாக ஜெர்மானியர்களால் ஆராதிக்கப்பட்டவர் குந்தர் கிராஸ். போருக்குப் பிந்தைய காலக்கட்டங்களில் ஜனநாயகத்தின் முக்கியத்துவதை வலியுறுத்தி வந்தார் குந்தர் கிராஸ்.
ஆனால், 2006-ம் ஆண்டு இவர் தனது நினைவோடை, "skinning the Onion" - என்பதில் அடால்ஃப் ஹிட்லரின் படுபயங்கரமான எஸ்.எஸ். ஆர்மியில் தான் சேவையாற்றியதை வெளிப்படுத்தி அத்தனை காலம் சேமித்து வைத்திருந்த தன் நற்பெயரை இழந்தார். அதேபோல் இஸ்ரேல் பற்றிய இவரது நிலைப்பாடும்க் சர்ச்சைகளை கிளப்பின.
2012-ம் ஆண்டு குந்தர் கிராஸ் 'வாட் மஸ்ட் பி செட்' என்ற உரைநடைப் பாணி கவிதையில், இஸ்ரேலின் அணு ஆயுதத் திட்டங்களை கடுமையாகச் சாடியிருந்தார். ஏற்கெனவே அமைதியின்மையில் உழலும் உலகிற்கு இஸ்ரேல் ஒரு பெரிய அச்சுறுத்தல் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.
பயிற்சி பெற்ற சிற்பியான குந்தர் கிராஸ், 1959-ம் ஆண்டு ‘டின் டிரம்’ என்ற தனது நாவலின் மூலம் பிரசித்தி பெற்றார். இதனை தொடர்ந்து ‘கேட் அண்ட் மவுஸ்’(Cat and Mouse) பிறகு டாக் இயர்ஸ் (Dog Years) ஆகிய படைப்புகள் வெளிவந்தன.
யதார்த்தமான புற விவரங்களுடன் கற்பனைச்செறிவு சார்ந்த படிமங்களையும் உருவாக்கியதன் மூலம் மேற்கூறிய 3 படைப்புகளும் நாஜிகளின் எழுச்சி பற்றிய ஜெர்மனி மக்களின் எதிர்வினை பற்றியதான புனைவாக அமைந்தது. போர்களின் பயங்கரம், மற்றும் அடால்ப் ஹிட்லர் தோல்வியடைந்த பிறகு ஜெர்மானியர்களிடம் காணப்பட்ட குற்ற உணர்வு ஆகியவற்றை எடுத்துரைப்பதாக அந்த 3 படைப்புகளும் அமைந்தன.
டின் டிரம் உள்ளிட்ட படைப்புகளில், ராணுவத்தில் தான் சேவையாற்றிய சொந்த அனுபவம் மற்றும் பிறகு அமெரிக்காவினால் போர்க்கைதியாக சிலகாலம் கழித்த அனுபவங்களை எழுதியுள்ளார் குந்தர் கிராஸ்.