

சிரியா உள்நாட்டுப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சீனாவும் ரஷ்யாவின் தங்கள் ‘ரத்து’ அதிகாரத்தைப் பயன்படுத்தி தோற்கடித்தன.
போர்க் குற்றங்களுக்கு சிரியாவை பொறுப்பேற்கச் செய்யவேண்டும் என்று ஐ.நா. மூத்த அதிகாரிகளின் தொடர் வேண்டுகோளுக்குப் பிறகு இத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
பாதுகாப்பு கவுன்சிலின் 13 உறுப்பு நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்தன. இந்நிலையில் சீனாவும் ரஷ்யாவும் தங்கள் ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி இத்தீர்மானத்தை தோற்கடித்தன. இத்தீர்மானம் வெற்றி பெற்றிருந்தால், சிரிய உள்நாட்டுப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (ஐ.சி.சி) அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும்.
சிரியாவில் 2011 மார்ச் மாதம் தொடங்கிய உள்நாட்டுப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் பெருமளவில் எழுந்துள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு வருவதற்கு முன், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் குறிப்புகளை, துணை பொதுச் செயலாளர் ஜான் எலியசன் வாசித்தார். “நீதி பெறுவதற்கு சிரிய மக்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது. இந்த உரிமையை காப்பது ஐக்கிய நாடுகள் மற்றும் உறுப்பு நாடுகளின் அடிப்படை கடமை” என்று பான் கி மூன் கூறியிருந்தார்.
“சிரியா உள்நாட்டுப் போர் தொடங்கியது முதல் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை அக்குற்றங்களுக்கு பொறுப்பாக்க வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அங்கு மனிதாபிமான உதவிகள் செய்பவர்கள் மீது சமீபத்தில் தாக்குதல் நடந்துள்ளது. இதுவும் கடும் போர்க் குற்றமே. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசரத் தேவை எழுந்துள்ளது” என்றும் பான் கி மூன் கூறியிருந்தார்.
சிரியா விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கைக்கு எதிராக சீனாவும் ரஷ்யாவும் தங்கள் ரத்து அதிகாரத்தை பயன்படுத்துவது இது நான்காவது முறை. தீர்மானத்தின் மீது ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் சமந்தா பவர் பேசுகையில், “சிரியாவில் நடைபெறும் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்துவது பாதுகாப்பு கவுன்சிலின் கடமை.
அத்துமீறலில் ஈடுபடுவோரை குறைந்தபட்சம் அதற்கு பொறுப்பாக்குவதை உறுதிப்படுத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.