Published : 05 Mar 2015 09:58 AM
Last Updated : 05 Mar 2015 09:58 AM

உலக மசாலா: நாய்களுக்கு தினமும் 400 கிலோ உணவு

அமேசானில் வாழும் சினேரியோஸ் மொர்னர் என்ற பறவையின் குஞ்சு தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்கிறது. முட்டையில் இருந்து வந்தவுடன் குஞ்சின் உடல் முழுவதும் கம்பளிப் பூச்சியைப் போல கூர்மையான, விஷமுடைய முட்கள் ஆரஞ்சு வண்ணத்தில் நீட்டிக்கொண்டிருக்கின்றன. நிறத்தையும் முட்களையும் பார்க்கும் எதிரி, குஞ்சின் அருகே வர நினைக்காது.

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறைதான் தாய்ப் பறவை உணவூட்டும். அதனால் தாயின் தயவை எதிர்பார்க்காமல், தானே உணவு தேடிக் கிளம்பிவிடுகிறது குஞ்சு. பறக்கும் அளவுக்குச் சக்தி இருக்காததால், எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு இயற்கை இப்படி ஒரு பாதுகாப்பை குஞ்சுக்கு அளித்திருக்கிறது. முதிர்ச்சியடைந்தவுடன் ஆரஞ்சு வண்ண முடிகள் காணாமல் போய்விடுகின்றன. சினோரியஸ் மொர்னர் பறவையின் இந்தத் தகவமைப்பைப் பற்றி 2012-ம் ஆண்டில்தான் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தன் சிறகே தனக்கு உதவி!

சீனாவின் ஷான்க்ஸி மாகாணத்தில் வசிக்கிறார் 60 வயது வாங் யான்ஃபாங். 2009-ம் ஆண்டு நாய்கள் பாதுகாப்பு மையத்தை ஆரம்பித்தார். இன்று 1300 நாய்களைப் பராமரித்து வருகிறார். தினமும் 400 கிலோ உணவுகளைச் சமைத்துப் போடுகிறார். இவருக்கு உதவியாக 4 பெண்கள் இருக்கிறார்கள். தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து உணவு தயாரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். வாங் வளர்த்த நாய்கள் என்றாலும் இவை எல்லா நேரங்களிலும் அன்பாக இருப்பதில்லை.

சில நேரங்களில் கடித்துவிடுகின்றன. ஆனாலும் பராமரிப்பதைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். ’குழந்தை கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டால் விட்டுவிடுவோமா? அது போலத்தான் இந்த நாய்களும்’ என்கிறார் வாங். நாய்களுக்கான உணவு, மருத்துவக் கண்காணிப்பு போன்றவற்றுக்கு நன்கொடைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். வாங்கின் சேவை மனப்பான்மையைக் கண்டு தாராளமாக நிதியுதவி குவிகிறது.

அடேங்கப்பா!

உக்ரைனைச் சேர்ந்த 58 வயது வலெரி ஸ்மாக்லிக்கு உலகிலேயே மிக அடர்த்தியான, நீளமான இமை முடிகள் பெற்றவர் என்ற பட்டம் கிடைத்திருக்கிறது. தன்னுடைய இமை முடிகள் நீளமாக வளர்வதற்கு, ரகசிய உணவு ஒன்றை உட்கொள்வதாகச் சொல்கிறார் வலெரி. இமைகளை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கும். அதற்காகத்தான் பார்வைக்கு இடையூறாக இருந்தாலும் முடியை வளர்த்து வருகிறேன் என்கிறார். ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியவில்லை.

இமை முடிகளை வெட்டிவிட நினைத்தார். கின்னஸ் அலுவலகம் சென்று தன்னுடைய இமை முடியின் நீளத்தைப் பதிவு செய்தார். அமெரிக்காவின் ஸ்டூவர்ட் முல்லரிடம் இருக்கும் சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் கொஞ்ச நாள் வலெரி காத்திருக்க வேண்டும். அதனால் வெட்டும் எண்ணத்தைக் கைவிட்டு, கின்னஸ் சாதனைக்காகக் காத்திருக்கிறார்.

இப்படியெல்லாம் சாதனை செஞ்சு என்ன செய்யப் போறீங்க வலெரி?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x