

சர்ச்சைக்குரிய `இந்தியாவின் மகள்’ ஆவணப் படம் இந்திய சமூகத்தின் பிரதிபலிப்பு என்று அதன் இயக்குநர் லெஸ்லி உட்வின் தெரிவித்துள்ளார்.
டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார சம்பவத்தை அடிப் படையாக வைத்து பிரிட்டனை சேர்ந்த லெஸ்லி உட்வின் பிபிசி செய்தி நிறுவனத்துக்காக `இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப் படத்தை தயாரித்தார்.
இதில் பலாத்கார சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான முகேஷ் சிங்கின் எதிர்மறையான பேட்டியும் இடம்பெற்றுள்ளது. எனவே இப்படத்தை வெளியிட இந்திய அரசு தடை விதித்தது.
லெஸ்லி வுட்வின் டெல்லியை விட்டு வெளியேறி தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார். அங்கு `இந்தியாவின் மகள்’ ஆவணப் படத்தை அண்மையில் அவர் வெளியிட்டார்.
அமெரிக்க தொலைக்காட்சி சேனலுக்கு லெஸ்லி வுட்வின் அளித்துள்ள பேட்டியில் கூறி யிருப்பதாவது: இந்தியாவில் ஆண் குழந்தை பிறந்தால் இனிப்பு கள் வழங்கி கொண்டாடுகின்றனர். அதேநேரம் பெண் குழந்தை பிறந்தால் துக்கத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். குடும்பங்களில் சிறு வயது முதலே பெண் குழந்தைகள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை பெண்களுக்கு மதிப்பில்லை, ‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படம் இந்திய சமூகத்தின் அப்பட்டமான பிரதிபலிப்பு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலை பூர்விகமாக கொண்ட லெஸ்லி உட்வின், லண்டனில் வசித்து வருகிறார். இளம்வயதில் நடிகையாக இருந்த அவர் இப்போது ஆவணப் படங்களை தயாரித்து வருகிறார்.
அவர் டெல்லியில் அளித்த பேட்டியில், `நானே பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுள் ளேன், இந்தியாவில் பலாத்காரத் துக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆவண படம் தயாரித்தேன்’ என்று பணிவாகப் பேசியது நினைவுகூறத்தக்கது.