இந்திய - பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் சந்திப்பு: சண்டை நிறுத்த மீறல், தீவிரவாத பிரச்சினை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை

இந்திய - பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் சந்திப்பு: சண்டை நிறுத்த மீறல், தீவிரவாத பிரச்சினை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை
Updated on
1 min read

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமா பாத் சென்றுள்ள இந்திய வெளி யுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் நேற்று அந்த நாட்டு வெளியுறவுச் செயலாளர் ஆசிஷ் அகமது சவுத்ரியை சந்தித்துப் பேசினார்.

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறல், எல்லை தாண்டிய தீவிரவாதம், மும்பை தாக்குதல் வழக்கு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் தற்போது சார்க் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக இரண்டு நாள் பயணமாக நேற்று அவர் இஸ்லாமாபாத் சென்றார். அங்கு அந்த நாட்டு வெளியுறவுச் செயலாளர் ஆசிஷ் அகமது சவுத்ரியை சந்தித்துப் பேசினார்.

அப்போது இருநாட்டு வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் எல்லையில் அடிக்கடி சண்டை நிறுத்தம் மீறப்படுவது, எல்லை தாண்டிய தீவிரவாதம், மும்பை தாக்குதல் வழக்கு ஆகி யவை குறித்து பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் சவுத்ரியிடம் ஜெய்சங்கர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.

இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பு குறித்து பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜெய்சங்கர், இருதரப்பு பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக இருந்தது, கருத்து வேறுபாடுகளைக் களைய வும் பரஸ்பரம் நம்பிக்கையை வளர்க்கவும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர்கள் நிலையிலான பேச்சு வார்த்தை டெல்லியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களை அழைத்துப் பேசியதால் கடைசி நேரத்தில் வெளியுறவுச் செயலாளர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

தற்போது இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் நல்லெண்ண பயணமாக இஸ்லாமாபாத் சென்றிருப்பதால் தடைபட்ட பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in