Published : 29 May 2014 10:00 AM
Last Updated : 29 May 2014 10:00 AM

பிரேசிலில் உலகக் கோப்பை கால்பந்துக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது: பணத்தை விரயம் செய்வதாக குற்றச்சாட்டு

பிரேசிலில் உலகக் கோப்பை கால்பந்தை எதிர்த்து நடைபெறும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. தலைநகர் பிரேசிலியாவில் உலகக் கோப்பை போட்டிக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்பந்து மைதானத்துக்கு எதிரே நாட்டின் பாரம்பரிய உடையை அணிந்து எதிர்ப்பாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குதிரை படை போலீஸார் அடித்து விரட்டினர்.

முன்னதாக நேற்று முன்தினம் கால்பந்து போட்டியை நேரடியாக ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனல் அலுவலகத்துக்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள் உள்ளிட்ட கையில் கிடைத்த பொருள்களை போலீஸார் மீது வீசி எறிந்தனர்.

சிலர் வில், அம்புகளை எடுத்து வந்து போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸார் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மோதல் இரவு வரை நீடித்தது. உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12 முதல் ஜூலை 13-ம் தேதிவரை பிரேசிலின் 12 நகரங்களில் நடைபெறவுள்ளது. வீடு இல்லாத தொழிலாளர்கள் சங்கம் என்ற அமைப்பு கால்பந்து போட்டிக்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பு மக்கள் வறுமையில் வாடி வரும் நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக அரசு கோடிக்கணக்கான பணத்தை வீணாக செலவு செய்வதாக அந்த அமைப்பினர் குற்றசாட்டியுள்ளனர். முதலில் எதிர்ப்புப் பேரணியில் தொடங்கிய போராட்டம் இப்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்து வருகிறது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நாங்கள் எதிர்க்கவில்லை. அதனை நடத்துவதற்காக பிரேசில் அரசு பெருமளவு பணத்தை விரயம் செய்வதைத்தான் எதிர்க்கிறோம் என்று எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர். பிரேசிலின் மற்றொரு முக்கிய நகரமான சாவ் பாவ்லோவில் ஊதிய உயர்வு கேட்டு ஆசிரியர்களும் ஊர்வலம் மேற்கொண்டனர். இது அமைதியாக நடந்து முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x