

மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்க தலைவர் ஜகியுர் ரஹ்மான் லக்வியின் தடுப்புக் காவலை ரத்து செய்துள்ள பாகிஸ்தான் நீதிமன்றம் அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் நெருக்கடி காரணமாக அவரை பொது அமைதி பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாகிஸ்தான் அரசு தடுப்புக் காவ லில் சிறையில் வைத்திருந்தது. இந்நிலையில் இதனை எதிர்த்து இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் லக்வி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி நூருல் ஹக் குரேஷி, பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் லக்வியை சிறையில் அடைத்திருப்பது சட்டவிரோத மானது. எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். லக்வியின் தடுப்புக் காவலை பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் இப்போது இரண்டாவது முறையாக ரத்து செய்துள்ளது.
கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய 11 தீவிரவாதிகள், மும்பையின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இதில் 154 பேர் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்புப் படையினரின் பதிலடியில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி உயிருடன் பிடிக்கப்பட்டார். இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அவர் 2012 நவம்பர் 21-ல் புணே சிறையில் தூக்கிலிடப்பட்டார். இந்த சம்பவத்தில் திட்டம் வகுத்தது, தீவிரவாதிகளுக்கு தேவையான ஆயுதங்களுக்கு ஏற்பாடு செய்தது உள்ளிட்டவற்றில் லக்வி ஈடுபட்டுள்ளார்.