Published : 23 Mar 2015 09:14 AM
Last Updated : 23 Mar 2015 09:14 AM

சிங்கப்பூரை தோற்றுவித்த லீ க்வான் யூ காலமானார்

சிங்கப்பூரைத் தோற்றுவித்த லீ க்வான் யூ உடல்நலக் குறைவால் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91.

சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ க்வான் யூ, உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரது உயிர் அதிகாலை 3.18 அளவில் பிரிந்ததாக அந்நாட்டு பிரதமர் தனது அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் தெரிவித்தார். லீ, கடந்த மாதம் அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

1965-ம் ஆண்டு மலேசியாவிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலையடைந்த பிறகு தற்போதைய சிங்கப்பூருக்கான அடித்தளத்தை அமைத்த லீ, மக்கள் செயல் கட்சியை தொடங்கி அந்நாட்டின் முதல் பிரதமர் ஆனார். 1959 - 1990 பிரதமராக பதவி வகித்தார். இவரது ஆட்சிக் காலகட்டத்தில் பிரிட்டிஷிடமிருந்து முழு அதிகாரத்தை அந்நாடு பெற்றது.

31 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். துறைமுக நகரமாக மட்டுமே அறியப்பட்ட சிங்கப்பூர் பிரம்மிக்கும் வகையில் வர்த்தக நகரமாக உருமாறியது.

திறமையான, பொறுப்பான, நீடித்த முற்போக்கான சிந்தனையுடய ஊழலைத் தடுக்கும் ஆட்சியாக அவரது ஆட்சிக் காலம் இருந்ததால் மக்கள் மத்தியில் அவர் சிறந்த தலைவராக திகழ்ந்தார்.

சுத்தமே முதல் நோக்கமாகக் கொண்ட அவர், ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்களை அழைத்து, அவர்களுடன் இணைந்து, சிங்கப்பூரை சுத்தம் செய்தார். இதற்கு பின்னரே, சுத்தத்தின் மதிப்பையும் அவசியத்தையும் உணர்ந்த சிங்கப்பூர் மக்கள், அவரது வழியில் இன்று வரை நடந்து வருகின்றனர்.

ஆட்சியில் இல்லாத போதிலும் ஆளுமையுடன் திகழ்ந்த அவர் 'உலகின் பாலைவனச் சோலை' என அனைவராலும் அழைக்கப்பட்டார். நிர்வாக செயல்பாட்டில் தொடர்ந்து பங்காற்றிய லீ, 2011-ஆம் ஆண்டு அமைச்சரவை செயல்பாடுகளிலிருந்து விலகினார். சமீப காலமாக வயது மூப்பு காரணமாக பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.

லீயின் மறைவையொட்டி சிங்கப்பூர் அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

அவரது உடல் ஸ்ரீ தெமாசெக் கில் (அதிபர் மாளிகை) வைக் கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நாளை முதல் 28-ம் தேதி வரை நாடாளு மன்றத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும். 29-ம் தேதி இறுதி சடங்கு நடைபெறுகிறது.

தலைவர்கள் இரங்கல்

சிங்கப்பூர் தந்தை லீயின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் இரங்கல் செய்தியில், "சிங்கப்பூர் தந்தையும் முன்னாள் பிரதமருமான லீ க்வான் யூ மரணமடைந்தது மிகவும் வேதனை அளிக்கும் தருணம்.

தொலைநோக்குப் பார்வையுடன் தலைவர்கள் மத்தியில் சிங்கமாகத் திகழ்ந்தவர். லீயின் வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களை அளிப்பதாக இருக்கிறது. அவரது இழப்பு வருத்தமளிக்கிறது.

லீயின் குடும்பத்தினருக்கும் அம்மக்களுக்கும் நமது பிரார்த்தனை உடன் இருக்கும். லீயின் ஆன்மா சாந்தியடையட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் மிச்சேல் ஒபாமா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "லீயை இழந்து நிற்கும் சிங்கப்பூர் மக்களின் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாமனிதர் அவர்.

மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர். உலக நாடுகளில் சிங்கப்பூர் இன்று சிறந்து நிற்க காரணமானவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் லீயின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஐ.நா. பொது சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆசிய அரசியல் வரலாற்றில் உயரிய இடம் வகிப்பவர் லீ. சிங்கப்பூரை உருவாக்கி 50 ஆண்டுகளாகும் இந்தத் தருணத்தில் நம்மை விட்டு லீ பிரிந்தது வருத்தம் அளிக்கிறது. அவர் என்றும் நம் நினைவில் இருப்பார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x