Last Updated : 12 Mar, 2015 02:42 PM

 

Published : 12 Mar 2015 02:42 PM
Last Updated : 12 Mar 2015 02:42 PM

சிரியாவின் வெளிச்சம் அன்றும் இன்றும்: அதிர்ச்சியூட்டும் சீன செயற்கைக்கோள் படங்கள்

உள்நாட்டுப் போரால் சிதைந்திருக்கும் சிரியாவில் முற்றிலும் ஒளி இழந்திருப்பதற்கான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.

சிரியாவில் அதிபர் ஆசாதுக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போராட்டம் வெடித்தது. இதனால் ஏற்பட்ட உள்நாட்டு போர் முடிவுக்கு வராமல் இன்று வரை தொடர்கிறது.

சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரில் அந்நாட்டின் உள்கட்டமைப்புகள் முற்றிலுமாக அழிந்துள்ளதும், வர்த்தக மையங்கள் 97 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தும் செயற்கைக்கோள் படத்தை சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

உள்நாட்டுப் போர் துவங்குவதற்கு முன் இருந்த சிரியாவுக்கும் தற்போது, வெளியாகியுள்ள சிரியாவின் செயற்கைக்கோள் படத்தை ஒப்பிடும்போது, அந்த நாட்டின் ஒளி முற்றிலுமாக அழிந்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படத்தில் அலீபோ நகரின் நிலை மிக மோசமானதாக காணப்படுகிறது.

>#WithSyria வெளியிட்டுள்ள (2015) சிரியா - செயற்கைக்கோள் படம்.

கடந்த 2011 மார்ச் மாத படத்தில் இடம்பெற்ற ஒளிர்வாய்ந்த பகுதிகளில் 83 சதவீதம் தற்போதைய படத்தில் காணப்படவில்லை. இந்த புதிய இருள் மூழ்கிய இரவு நேர படம் சிரியாவின் இருளை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

அந்த நாட்டின் உள்நாட்டு வளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட நிலையில், சிரியாவை விட்டு ஒளி முற்றிலுமாக விலகிகொண்டிருப்பதாக சீன வூஹான் பல்கலைக்கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்க்கைகோள் ஆய்வு குறித்து ஆய்வாளர் லீ கூறும்போது, "செயற்கைக்கோள் படங்கள் பொய் சொல்லாது. இந்த இரவு நேர படங்கள் நம்ப முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. சிரிய நாட்டு மக்களுக்கு உதவி தேவை" என்று கூறியுள்ளார்.

இது தொடர்பான படங்களையும் தகவல்களையும் வெளியுள்ள >'வித் சிரியா' அமைப்பு, ஒளி மங்கிய சிரியாவை மையப்படுத்தி உணர்வுப்பூர்வ குறும்படம் ஒன்றையும் வெளியிட்டது. அந்தக் குறும்படம் இதுவே...