Last Updated : 31 Mar, 2015 01:02 PM

 

Published : 31 Mar 2015 01:02 PM
Last Updated : 31 Mar 2015 01:02 PM

ஏமன் அகதிகள் முகாம் மீது வான்வழி தாக்குதல்: 40 பேர் பலி

ஏமனில் போர்ச் சூழலால் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் முகாம் மீதான வான்வழித் தாக்குதலில் சுமார் 40 பேர் பலியானது தெரியவந்துள்ளது.

ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் போரில் ஈடுப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மேற்கு ஏமனில் தாக்குதலுக்கு அஞ்சி இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் இருக்கும் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அங்கிருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

முகாம் இருக்கும் இடம் அல்-மஸாராக் என்று அழைக்கப்படுகிறது. இங்கு கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் பல்வேறு தாக்குதல் அச்சுறுத்தலால் சுமார் 5000 மக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

கிளர்ச்சியாளர்கள் பிடியில் அரசு செய்தி நிறுவனம்

ஏமன் அரசு செய்தி நிறுவனமாக சபா-வை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், அந்த செய்தி நிறுவனமும் இந்த தாக்குதல் நடந்தது உண்மை என்று தெரிவித்துள்ளது. சவுதி விமானத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் பலியானதாக ஆதாரப் படங்களையும் வெளியிட்டுள்ளது.

இருப்பினும் இந்த தாக்குதல் குறித்து சவுதி அரசு விசாரித்து வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

சவுதி படையின் தளபதி அகமது பின் அஸிரி கூறும்போது, "கீழிருந்து நடந்த தாக்குதலுக்கு சவுதி விமானங்கள் பதிலடி தந்திருக்கலாம். ஆனால் தாக்குதலுக்குள்ளான பகுதி இடம்பெயர்ந்து வாழும் மக்களின் இருப்பிடமா என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை. இது குறித்து நாங்கள் அதிகாரிகளிடம் விசாரித்து வருகிறோம். தாக்குதலுக்கு ஹெளதி கிளர்ச்சியாளர்கள் பீரங்கிகளை பயன்படுத்தியதே காரணம்" என்றார்.

இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக வந்திருக்கும் தகவல் குறித்து சவுதி தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை.

முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவின் விசுவாசிகளான ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஏமன் தலைநகர் சனாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து இப்போதைய அதிபர் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து, கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு சவூதி அரேபியா ராணுவம் ஆதரவு அளித்து வருகிறது. சவூதி போர் விமானங்கள் தாக்குதலைத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x