பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பதில் ஆண்கள் ஈடுபட வேண்டும்: ஐ. நா.

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பதில் ஆண்கள் ஈடுபட வேண்டும்: ஐ. நா.
Updated on
1 min read

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதில் ஆண்கள் ஈடுபட வேண்டும் என ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார்.

இருப்பினும், பலாத்கார குற்றவாளியின் பிபிசி தொலைக்காட்சிப் பேட்டி குறித்து கருத்து கூற அவர் மறுத்துவிட்டார்.

டெல்லி மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கிய குற்றவாளி முகேஷ் சிங் அளித்த பேட்டியில் 'நிர்பயா'-வுக்கு எதிரான கருத்து விவகாரம் குறித்து ஐ. நா. பொது செயலாளர் பான் கீ மூன் செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் டுஜாரிக்கிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர்,"குற்றவாளி தெரிவித்துள்ள சொற்களால் விளக்க முடியாத கருத்துகளுக்கு பதில் அளிக்க முடியாது. பெண்கள் மீதான் வன்முறையை எதிர்க்க வேண்டியது கட்டாயம். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் என்பதிலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் ஆண்களும் ஈடுபட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவதிலும் பான் கீ மூன் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்" என்றார்.

’இந்தியாவின் மகள்’ ஆவணப் படத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "பத்திரிகை சுதந்திரத்துக்கு ஐ.நா. என்றுமே ஆதரவானது. ஆனால் சில நாடுகளில் வழக்கு விசாரணைகளின்போது, ஊடகங்கள் ஏற்படுத்தும் பார்வை சில மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் அதற்குள் நாம் செல்ல வேண்டாம்.

குற்றவாளியின் பேச்சு குறித்து முழு விவரம் எங்களுக்கு தெரியவில்லை. எனவே அது குறித்து பதிலளிக்க ஒன்றுமில்லை" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in