Last Updated : 05 Mar, 2015 08:42 PM

 

Published : 05 Mar 2015 08:42 PM
Last Updated : 05 Mar 2015 08:42 PM

பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள்: இங்கிலாந்து முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் எச்சரிக்கை

பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுத ஆபத்துகள் குறித்து உலக நாடுகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இங்கிலாந்தின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் லியம் ஃபாக்ஸ் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள 'சென்டர் ஃபார் ஸ்ட்ராடஜிக் அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ்' எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறியதாவது:

தற்போது அமெரிக்காவில், ஈரான் நாட்டு அணு ஆற்றல் திட்டம் குறித்து பேசி வருகின்றனர். இதற்கிடையில் சுமார் 120 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான் குறித்து அவர்கள் சிந்திக்க மறந்துவிட்டார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது. தற்போது, பாகிஸ்தானில், ஓர் ஆண்டுக்கு சுமார் 24 எண்ணிக்கையில் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் திறன் கொண்ட இரண்டு புதிய கன நீர் அணு உலைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

இன்று நாம் தேசம் கடந்த தீவிரவாதத்துக்குப் பழகியிருக்கிறோம். இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அவர்கள் (தீவிரவாதிகள்) தங்களின் வழிமுறைகளை மாற்றிக் கொண்டுள்ளார்கள். அதனால், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இவ்வகையான அணு ஆயுத பரவலாக்கம், தீவிரவாதிகளின் கையில் எளிதில் சென்றுவிடக் கூடிய ஆபத்து உள்ளது. இந்தப் பிரச்சினையை யாரும் விரிவாகப் பேசவில்லையோ என்று தோன்றுகிறது.

நான் எந்த ஒரு தவறான எண்ணத்திலும், பாகிஸ்தான் மீது இத்தகையப் பார்வையைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அந்நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாததே இத்தகைய எண்ணம் ஏற்படக் காரணமாக உள்ளது.

நம்மில் பலரும் நம் எதிரிகளுடன் அரசியல் ரீதயாகவே நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். ஆனால் பாகிஸ்தான் போன்ற நாட்டில் யார் எதற்குப் பொறுப்பு, அரசியல்வாதிகளா, ராணுவமா அல்லது உளவுத்துறையா என்று வெளிப்படையாகத் தெரியாததால், அவர்கள் அனைவருடனும் உறவை ஏற்படுத்திக்கொள்ளும் சூழ்நிலை உள்ளது.

ஒரு இங்கிலாந்துக்காரனாக, பிரிவினைவாதத்துக்குப் பிறகு, இந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை இருப்பதும், மத்திய வர்க்க பொருளாதாரம் அதிகரித்துக்கொண்டே இருப்பதும் அதே சமயம், அவை ஏன் பாகிஸ்தானில் நிகழவில்லை என்பதும் எனக்கு ஆச்சரியமளிக்கும் விஷயங்களாக இருந்துகொண்டிருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x