

சர்வதேச அளவில் இன்டர்நெட்டில் அதிகமான மக்களை ஈர்த்தவர்களின் பட்டியலில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ஷாரூக்கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இன்டர்நெட்டில் முக்கியமாக விக்கிபீடியா இணையதளத்தில் சர்வதேச அளவில் பிரபலமான நபர்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டது, அவர்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை சேர்ந்தது, அவற்றை சரி செய்தது ஆகியவற்றின் அடிப்படையில் டைம் பத்திரிகை 100 பேர் அடங்கிய இப்பட்டியலை தயாரித்துள்ளது.
இதில் 65.5 புள்ளிகளுடன் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் 45.3 புள்ளிகளுடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளார். இப்பட்டியலில் 23.98 புள்ளிகளுடன் சச்சின் 68-வது இடத்தில் உள்ளார். 22.07 புள்ளிகளுடன் ஷாரூக்கான் 99-வது இடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தியர்கள் இவர்கள் மட்டும்தான்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் 22.08 புள்ளிகளுடன் ஷாருக்கானுக்கு ஓரிடம் முன்னே உள்ளார். பாப் பாடகிகள் மடோனா, பியான்சே நோஸல் ஆகியோர் முறையே 3, 4-வது இடத்தில் உள்ளனர். அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 11-வது இடத்தையும், ரஷ்ய அதிபர் புதின் 27-வது இடத்தையும், செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் 61-வது இடத்தையும், போப் பிரான்சிஸ் 70-வது இடத்தையும், பார்முலா ஒன் கார் பந்தைய வீரர் மைக்கேல் ஷுமேக்கர் 77-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.