

இராக்கில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இதன்மூலம் ஒரு வருடத்தில் 151 கிலோ வரை எடை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இராக்கைச் சேர்ந்தவர் அலி சதாம் (43). காலையில் 24 முட்டைகள், மதியம் 2 கோழி, 12 சப்பாத்திகள், இரவில் ஒரு ஆடு, 2 லிட்டர் பால், 15 அரபி ரொட்டி ஆகியவைதான் இவரது உணவு. அதிக அளவில் சாப்பிட்டதால் அவரது எடை 301 கிலோவாக அதிகரித்தது. இதையடுத்து இராக்கிலேயே அதிக எடை கொண்ட மனிதர் என்ற பெயர் பெற்றார். உடல் பருமன் காரணமாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஒழுங்கற்ற தூக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்டார். இதனால் தனது உடல் எடையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
கடந்த 23-ம் தேதி பிஎல்கே சூப்பர் ஸெபெஷாலிட்டி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு ‘ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி’ அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை முடிந்த 5 நாட்களில் அவரது எடை 20 கிலோ வரை குறைந்துள்ளது. அடுத்த ஓராண்டில் 151 கிலோ வரை குறைய வாய்ப்புள்ளது. அவருக்கு திரவ உணவு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அறுவை சிகிச்சை நிபுணர் தீப் கோயல் கூறும்போது, “அலி சிகிச்சைக்கு வந்தபோது, ஒரு அடி அளவுக்கு கொழுப்பு சேர்ந்திருந்ததால் அவரது அடி வயிற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்துவதற்காக அவரது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது சவா லானதாக இருந்தது” என்றார்.