Last Updated : 11 Mar, 2015 10:26 AM

 

Published : 11 Mar 2015 10:26 AM
Last Updated : 11 Mar 2015 10:26 AM

மாறுகிறதா மாலத்தீவு?- 3

ஜிஎம்ஆர் குழுமத்துக்கும், மாலத்தீவு அரசுக்கும் இடையே ஏற்பட்ட உரசல் மாலத்தீவு - இந்தியா உறவிலும் பெரும் பின்னடைவை உருவாக்கியது.

ஜிஎம்ஆர் குழுமத்தின் தலைமை அலுவலகம் இருப்பது பெங்களூரில். கிரந்தி மல்லிகா அர்ஜுனராவ் என்பவரால் 1978-ல் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் சணல், சர்க்கரை போன்ற விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்களில்தான் ஈடுபட்டார்கள்.

ஆனால் மெல்ல மெல்ல கட்டமைப்புத் துறையில் தங்களை விரிவுபடுத்திக் கொண்டார்கள். விமான நிலையங்கள், மின் நிலையங்கள், நெடுஞ்சாலைகள், நகர கட்டமைப்பு என்று பல இடங்களில் அழுத்தமாகவே கால்பதித்தார்கள். இந்தியாவில் மட்டுமல்ல தெற்கு ஆப்பிரிக்கா, துருக்கி, இந்தோனேஷியா, சிங்கப்பூர், பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளில்கூட இவர்கள் பல வெற்றிகரமான செயல் திட்டங்களை செய்து காட்டினர்.

அந்த விதத்தில்தான் மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள விமான நிலையத்தை நவீனமயமாக்க அந்நாட்டு அரசுடன் ஜிஎம்ஆர் குழுமம் ஒப்பந்தம் செய்து கொண்டது. (ஏற்கெனவே துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் விமான நிலையத்தை இவர்கள் நவீனப்படுத்தி இருக்கிறார்கள். நம்நாட்டில் ஹைதராபாத், டெல்லி விமான நிலையத்தை குறைந்த கால அவகாசத்திலேயே நவீனப்படுத்தி நல்ல பெயர் வாங்கியிருக்கிறார்கள்).

ஒப்பந்தப்படி விமான நிலையத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு பயணியிடமிருந்தும் 25 டாலர் தொகை வசூலிக்கப்பட்டு அதில் ஒரு குறிப்பிட்ட பகுதி ஜிஎம்ஆர் குழுமத்துக்கு வந்து சேர வேண்டும். அதே சமயம் ஒரு குறிப்பிட்ட அளவு தொகை இப்படி வசூலாகவில்லை என்றால் அதை மாலத்தீவு அரசு ஈடுகட்ட வேண்டும்.

ஆனால் மாலத்தீவு அரசு கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை என்பதோடு ஒப்பந்தத்தையும் குறித்த காலத்துக்கு முன்பாகவே முடிவுக்குக் கொண்டு வந்தது.

தொடங்கியது சட்டப்பூர்வமான யுத்தம். ஜிஎம்ஆர் குழுமம் சிங்கப்பூரில் வழக்கு தொடுத்தது. (ஒப்பந்தப்படி இருதரப்புக்கும் இடையே ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதனை சிங்கப்பூர் சட்டத்துக்குட்பட்டுதான் தீர்த்துக் கொள்ள வேண்டும்).

பேச்சு மூலம் நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியும் என்று கூறினார் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன். அதே சமயம் நஷ்டஈடு குறித்து பேசினாரே தவிர தொடர்ந்து விமான நிலையப் பணிகளை மேற்படிக் குழுமமே செய்யலாம் என்பது குறித்து அவர் வாயைத் திறக்கக் காணோம்.

இந்தப் பிரச்சினை அரசியல் வடிவத்தை பெற்றுவிட்டது. எங்கள் கட்சி மற்றும் உள்ளூர் எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் கவனிக்க வேண்டியிருக்கிறது என்று மழுப்பினார்.

இதில் எங்கிருந்து அரசியல் நுழைந்தது என்கிறீர்களா? ஜிஎம்ஆர் குழுமம் மாலத்தீவு விமான நிலையத்தை நவீனமாக்கும் ஒப்பந் தத்தில் கையெழுத்திட்டபோது அங்கு இருந்தது நஷீத் தலைமையிலான அரசு. ஆனால் பின்னர் அங்கு ஆட்சி மாறிவிட்டது. ஜிஎம்ஆர் குழுமத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் செல்லாது என்று கூறியது புதிய அரசு. அதிபர் கூறியபடி நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் ஏற்படவில்லை.

சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் நீதிமன்றம் ஜிஎம்ஆர் குழுமத்துக்கு சாதகமாக சமீபத்தில் தீர்ப்பளித்திருக்கிறது. இதன்படி வழக்கு செலவுக்காக மட்டுமே 40 லட்சம் டாலர் தொகையை மாலத்தீவு அரசு அளிக்க வேண்டும். ஜிஎம்ஆர் குழுமம் நஷ்டஈடாக கேட்ட தொகை 1.4 பில்லியன் டாலர். இதற்காக தனி ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

50 கோடி டாலர் மதிப்பு கொண்ட மாலே விமான நிலைய திட்டம் முழுமை அடையாமல் பாதியில் கைவிடப்பட்டதில் மாலத்தீவுக்கு அவப்பெயர் உண்டாகி இருக்கிறது. இந்த விஷயத்தில் அந்நாட்டு அரசு நடந்து கொண்ட விதம் பல முதலீட்டாளர்கள் அங்கு செல்ல தயங்கும் நிலையை ஏற்படுத்தியது.

ஜிஎம்ஆர் பிரச்சினையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் உள்ள உறவு கொஞ்சம் சரிந்தது. தவிர ஆளும் கூட்டணியில் உள்ள தலைவர்கள் சிலர் இந்தியாவுக்கு எதிராக கூறிய சில விமர்சனங்கள் இந்தியாவைக் கோபம் கொள்ள வைத்தது.

இரண்டரை கோடி டாலர் அளவுக்குச் செய்வதாக இருந்த உதவிகளை இந்தியா நிறுத்திக் கொண்டது. மாலத்தீவில் தேசிய போலீஸ் அகாடமி ஒன்றை எழுப்பித் தரவும் இந்தியா ஒப்புக்கொண்டிருந்தது. அதையும் நிறுத்தி வைத்தது.

எனினும் 2014 இறுதியில் மாலே நகரில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது (காரணம் அந்தத் தீவின் ஒரே தண்ணீர் சுத்தம் செய்யும் கருவி செயலிழந்ததுதான்) இந்தியாவின் உடனடி உதவியைக் கோரியது மாலத்தீவு. இந்தியாவும் இம்முறை மறுக்காமல் உதவி செய்தது. கடல் நீரிலிருந்து குடிநீரைப் பிரித்தெடுக்கும் திட்டங்களிலும் உதவி செய்ய ஒத்துக் கொண்டது. மாலத்தீவு வெளிப்படையாகவே நன்றியை தெரிவித்துக் கொண்டது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x