Last Updated : 09 Mar, 2015 11:22 AM

 

Published : 09 Mar 2015 11:22 AM
Last Updated : 09 Mar 2015 11:22 AM

ஆஸ்திரேலியாவில் இந்திய பெண் கொலை: துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்

ஆஸ்திரேலியாவில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றிய இந்திய பெண் பிரபா (40) மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி பிரபா. இத்தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். சாப்ட்வேர் இன்ஜினீயரான பிரபா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பணியாற்றி வந்தார். சிட்னி புறநகர்ப் பகுதியான வெஸ்ட்மேட் பகுதியில் தங்கியிருந்த அவர் தினமும் ரயிலில் பணிக்குச் சென்று வந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பாராமட்டா என்ற ரயில் நிலையத்தில் இறங்கி அவரது வீடு அமைந்துள்ள வெஸ்ட்மேட் பகுதிக்கு இரவு 9.30 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பிரபா, தனது கணவர் அருண்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

பதறிய அருண்குமார் அண்டை வீட்டுக்காரர் அரவிந்துக்கு தகவல் கொடுத்தார். அரவிந்தும் அப்பகுதி மக்களும் விரைந்து வந்து பிரபாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது கழுத்து, மார்பு பகுதிகளில் கத்திக் குத்து காயங்கள் இருந்தன. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதிக ரத்தம் வெளியேறியதால் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

‘வரும் ஜூன் மாதம் கணவர், குழந்தையைப் பார்ப்பதற்காக பெங்களூர் வருவதற்கு பிரபா திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அவரது வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது’ என்று பிரபாவுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த கொலை தொடர்பாக இதுவரை எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. எனினும் பாலியல் பலாத்கார முயற்சி அல்லது கொள்ளை முயற்சியின் போது பிரபா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஆஸ்திரேலிய போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

வீட்டில் இருந்து 300 மீட்டர் தொலைவில்தான் பிரபா கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அப்பகுதி குடியிருப்புவாசிகளிடம் போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x