

ரஷ்யாவிடமிருந்து உக்ரைன் பெறும் எரிவாயுவுக்கு அந்நாடு முன்னரே பணம் செலுத்த வேண்டும் என்றும், இல்லா விட்டால் எரிவாயு விற்பனை ரத்து செய்யப்படும் என்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து உக்ரைன் எல்லையில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் பல ஆண்டுகளாக ரஷ்யாவிடமிருந்து எரிவாயு பெற்று வருகிறது. தவிர, அந் நாட்டிற்கு பொருளாதார ரீதியாகப் பல உதவிகளை ரஷ்யா செய்து வருகிறது. ஆனால் வேறு பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனைச் சுரண்டி தங்களுக்குத் தேவை யான எரிவாயுவை எடுத்துக் கொள்வதோடு, அதற்குச் செலுத்த வேண்டிய பணத்தையும் சரிவரச் செலுத்துவதில்லை.
‘ஐரோப்பிய நாடுகள் உக் ரைனுடன் எரிவாயு வணிகத்தில் ஈடுபடுகின்றன. ஆனால் அதற் கான பணத்தை சரியாகச் செலுத்தாமல் இருப்பதால் உக்ரைன் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், அந்நாடு ரஷ்யாவுக்குச் செலுத்த வேண்டிய தொகையைச் சரிவர செலுத்துவதில்லை. எனவே, உக்ரைன் ரஷ்யாவிடமிருந்து பெறும் எரிவாயுவுக்கு இனி, முன்னதாகவே பணம் செலுத்த வேண்டும். தவறினால் எரிவாயு வழங்கல் நிறுத்தப்படும்' என்று புதின் கூறியுள்ளார்.
தான் எடுத்திருக்கும் இந்த முடிவால் உக்ரைன் நாட்டில் இருக்கும் ரஷ்யர்களுக்கு மேற் கத்திய நாடுகளால் ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் உக்ரைன் எல்லையில் சுமார் 40,000 வீரர்களுடன் ஜெட் விமானங்கள், பீரங்கிகளை ரஷ்யா நிறுத்தியுள்ளது. 'டிஜிட்டல் குளோப்' எனும் செயற்கைக்கோள் நிறுவனம் உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யப் படைகளைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக 'நேட்டோ' அமைப்பு, ரஷ்யா எந்நேரத்திலும் உக்ரைனை தாக்கலாம் என்று கவலை தெரிவித்துள்ளது.