எச்-1பி விசாவில் பணியாற்றும் இந்தியர்கள் திறமை குறைவானவர்கள்: இன்போசிஸ் முன்னாள் ஊழியர் கருத்து

எச்-1பி விசாவில் பணியாற்றும் இந்தியர்கள் திறமை குறைவானவர்கள்: இன்போசிஸ் முன்னாள் ஊழியர் கருத்து
Updated on
1 min read

அமெரிக்காவில் எச்-1பி விசாவின் கீழ் பணியாற்றும் இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் திறமை குறைவானவர்கள் என்று இன்போசிஸ் முன்னாள் ஊழியரும் அந்த நிறுவன முறைகேட்டை அம்பலப்படுத்தியவருமான ஜே.பி.பால்மர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவதற்காக ஆண்டுதோறும் வெளிநாடுகளைச் சேர்ந்த 65 ஆயிரம் பேருக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா பெறுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், செனட் சபையின் நீதிக் குழு முன்பு நடைபெற்ற குடியேற்ற சட்டம் தொடர்பான விவாதத்தின்போது பால்மர் கூறியதாவது:

எச்-1பி விசாவில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் இளநிலை பட்டதாரிகள். இவர்களின் திறமை மிகவும் குறைவாக உள்ளது. வர்த்தகம் தொடர்பாக சிறிதளவே தெரிந்து வைத்துள்ளனர். சிலருக்கு சுத்தமாக தெரியவில்லை.

இவர்களுக்கு அமெரிக்கர்கள் பயிற்சி அளிக்கிறார்கள். ஆனால் இவர்களால் காலப்போக்கில் அமெரிக்கர்கள் வேலையை இழக்க நேரிடுகிறது. இவர்களுக்கு உள்ள ஒரே ஒரு திறமை என்னவென்றால் குறைவான ஊதியத்துக்கு பணியாற்றுவார்கள். வருமான வரியும் செலுத்துவதில்லை.

மேலும் இன்போசிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் பி1 மற்றும் எச்-1பி விசா சட்டத்தைத் தவறாக பயன்படுத்துகின்றன. இதுதவிர வருமான வரி மற்றும் பங்கு பரிவர்த்தனை விதிமுறைகளையும் மீறி செயல்படுகின்றன. இக்கட்டான நேரத்தில்கூட இந்த நிறுவனங்கள் வருமான வரி செலுத்துவதை தவிர்க்கின்றன. எனவே, எச்-1பி விசா எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் செயல்படும் இன்போசிஸ் நிறுவனம் விசா முறைகேடு செய்ததாக பால்மர் தொடர்ந்த வழக்கில், அந்த நிறுவனத்துக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in