Last Updated : 13 Mar, 2015 10:50 AM

 

Published : 13 Mar 2015 10:50 AM
Last Updated : 13 Mar 2015 10:50 AM

மாறுகிறதா மாலத்தீவு?- 5

இரண்டாம் உலகப்போரில் மாலத்தீவு பெரும் துன்பங்களை அனுபவித்தது. இலங்கையுடனான வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அரிசியைப் போதிய அளவு இறக்குமதி செய்ய முடியவில்லை. பலரும் நோய்க ளாலும், சத்துக் குறைவினாலும் இறந்தனர்.

அரசியலமைப்புச் சட்டம் புதுப் பிக்கப்பட்டது. இதன்படி பிரதமரானார் முகம் மது அமீன் தீதி. மீன் ஏற்றுமதித் தொழிலை தேசியமயமாக்கினார். புகையிலை பிடிப் பதற்குத் தடை விதித்தார். இந்தத் தடைக்கு மட்டும் பரவலான அதிருப்தி எழுந்தது.

1948-ல் இலங்கை பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது. மாலத்தீவு பிரிட்டனுடன் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. இதன்படி மாலத்தீவின் வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் பிரிட்டனுக்குப் பங்கு உண்டு. ஆனால் உள்நாட்டு விவகாரங்களில் அது தலையிடக் கூடாது. பதிலுக்கு பிரிட்டிஷ் ராணுவத்துக்கு அத்தனை வசதிகளையும் தன் பகுதியில் செய்து கொடுத்தது மாலத்தீவு. இந்தியா மீது கொண்ட ஆளுமையை இழந்திருந்த நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் பிரிட்டனுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது மாலத்தீவு.

மாலத்தீவில் 1953-ம் ஆண்டு சுல்தான் ஆட்சி முழுமையாக ஒழிக்கப்பட்டது. குடியரசு உருவானது. முதல் அதிபர் என்னவோ அமீன் தீதிதான். ஆனால் ஒரு வருடத்துக்குள் அவர் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. மறுபடியும் சுல்தான் ஆட்சி. மாலத்தீவு நாட்டின் 94-வது சுல்தானாகப் பதவியேற்றார் முகம்மது ஃபரீட் தீதி.

ஒப்புக் கொண்டபடி மாலத்தீவின் உள்நாட்டு விவகாரங்களில் பிரிட்டன் தலையிடவில்லைதான். ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்ட கான் தீவு என்பதில் தன்னை அழுத்தமாகவே காலூன்றிக் கொண்டது. அங்கு உருவாக்கப்பட்ட ராயல் ஏர்ஃபோர்ஸ் அமைப்பில் நூற்றுக் கணக்கான உள்ளூர்வாசிகள் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்.

1957-ல் மாலத்தீவு பிரதமராகப் பதவி யேற்றார் இப்ரஹிம் நாசிர். பிரிட்டனுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்த காலத்தைக் குறைக்க வேண்டும் என்றார். தவிர இதற்காக ஆண்டுதோறும் 2,000 டாலர் என பிரிட்டன் அளித்த தொகையை அதிகரிக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகளை வேலைக்கு எடுப்பதை பிரிட்டனின் விமான சர்வீஸ் மிகவும் குறைத்துக் கொண்டது. உள்ளூர் மக்கள் பதறிப் போனார்கள்.

மாலத்தீவு அரசு தந்திரமாகச் செயல்பட்டது. பிரிட்டனுக்கு “நீங்கள் தாராளமாக எங்கள் நாட்டுப் பகுதியை உங்கள் ராணுவ கேந்திரமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் கொடுத்து விடுங்கள்’’ என்றது.

பாதுகாப்பு என்ற பெயர் இருந்தாலும் பிரிட்டனின் காலனி நாடு போலவே நடத்தப்பட்டதை சுதந்திர வேட்கை கொண்டவர்களால் ஏற்க முடியவில்லை. எதிர்ப்பை பலமாகவே தெரிவித்தார்கள். ஒருவழியாக ஜுலை 26, 1965 அன்று சுதந்திரம் பெற்றது மாலத்தீவு.

என்றாலும் அடுத்த பத்து வருடங்களுக்கு பிரிட்டன் தனது விமானப்படைப் பிரிவை மாலத்தீவில் தொடர்ந்து நிறுத்தி வைத்தது. 1976-ல்தான் முழுமையாக மாலத்தீவில் இருந்து நகர்ந்தது பிரிட்டன்.

1965-ல் மாலத்தீவுக்கு முழு விடுதலை கொடுத்து அங்கிருந்து தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை விலக்கிக் கொண்டது பிரிட்டன். இதைத் தொடர்ந்து ஐ.நா.சபையில் உறுப்பினரானது மாலத்தீவு.

1968-ல் மீண்டும் சுல்தான் முறை ஆட்சி ஒழிக்கப்பட்டது. நசீர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுற்றுலாத் தலங்கள் பிற நாட்டினருக்கு பரவலான முறையில் திறந்துவிடப்பட்டன. ஆனால் உடனடியாக நிதி கிடைத்து விடவில்லை. விலைவாசி அதிகமானது.

ஆட்சியாளர் நசீரைக் கொல்லப் புரட்சியாளர்கள் திட்டமிட்டனர். உயிருக்குப் பயந்து 1978-ல் சிங்கப்பூருக்குப் பறந்தார் அவர். சும்மா இல்லை, 40 லட்சம் அமெரிக்க டாலரை மாலத்தீவு கஜானாவிலிருந்து எடுத்துக் கொண்டுதான் பறந்தார்.

நசீரின் இடத்தைப் பிடித்தார் மமூன் அப்துல் கயூம். ஒரு காலத்தில் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தவர். மாலத்தீவின் ஐ.நா. தூதராக பணியாற்றியவர். 1983-ல் மீண்டும் இவரே ஆட்சிக்கு வந்தார். காமன் வெல்த், சார்க் போன்ற அமைப்புகளில் மாலத்தீவு உறுப்பினரானது.

மூன்றாம் முறையாக 1988-ல் ஆட்சியைப் பிடித்தார் கயூம். அந்தத் தேர்தலில் அவருக்குப் போட்டியே இல்லை. 1993-ல் நான்காம் முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார் கயூம். இந்த முறை பொதுத் தேர்தல் கிடையாது. ஆலோசகர்களின் கணக்கெடுப்பு மூலம் மட்டுமே தேர்வு நடைபெற்றது.

வளரும் நாடுகளுக்கு இருக்கும் பல பிரச்னைகளை மாலத்தீவும் சந்தித்து வருகிறது. என்றாலும் 1998-ல் உண்டான எல் நினோவும் (கடல் பரப்பு வெப்பநிலை பாதிப்பு), பின்னர் உண்டான சுனாமியும் மாலத்தீவின் பொருளாதாரத்தை புரட்டிப் போட்டன.

செப்டம்பர் 2003-ல் தெற்கு மாலே பகுதியில் இருந்த சிறைச்சாலையில் தொடங்கியது ஒரு கலவரம். அங்கு கைது செய்து அடைக்கப்பட்டிருந்த 19 வயது ஈவான் நசீம் என்ற இளைஞன் காவலாளிகளால் கண்மூடித்தனமாக அடிக்கப்பட்டு உயிரிழந்தான்.

இறந்தவனின் பெற்றோர் அந்தப் பிரதேதத்தை பொது இடத்தில் வைத்துக் கதற, நகரமே கொதித்தெழுந்தது. கலவரங்கள் தொடங்கின. மக்கள் மஜ்லிஸ் எனப்படும் அந்த நாட்டுப் பாராளுமன்றம் கடுமையான கல்வீச்சுக்கு உள்ளானது. காவல் நிலையங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

எதிர்ப்பு மிகவும் அதிகமாக, கயூம் சில அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தினார். இனி ஒவ்வொரு அதிபர் தேர்தலிலும் போட்டி இருக்கும் என்றார். அதிபரின் ஆட்சிக்காலம் இரண்டு வருடங்கள்தான் என்றார். பிற அரசியல் கட்சிகளுக்கும் சட்ட அந்தஸ்து கொடுப்போம் என்றார்.

ஆனால் இவையெல்லாம் சொல்லளவில் நின்றன. உச்சமாக அமைந்தது 2004 ஆகஸ்ட் 13 அன்று அமைந்த ஒரு சம்பவம். இதை `கருப்பு வெள்ளி’ என்றே அங்கு குறிப்பிடுகிறார்கள்.

அன்று மாலத்தீவு தலைநகரின் முக்கிய சதுக்கத்தில் ஜனநாயக ஆதரவாளர்களும், புரட்சியாளர்களும் குழுமியிருந்தனர். திடீரென காவல்துறையினர் அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்களை அடித்து துவம்சம் செய்தனர். பெண்களும், குழந்தைகளும்கூட தப்பவில்லை. அவர்களில் பலர் தனியான இடத்தில் பல மாதங்களுக்கு வைக்கப்பட்டனர். மாலத்தீவு வரலாறில் சந்தேகமில்லாமல் இது ஒரு கருப்பு தினம்தான்.

அடுத்த விபரீதம் 2004 டிசம்பர் 26 அன்று காத்திருந்தது. சுனாமியால் 83 பேர் இறந்ததாக உடனடியாக அறிவிக்கப்பட்டது. நாட்டின் 21 தீவுகள் முழுவதுமாக அழிந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடிழந்தனர்.

இந்தக் களேபரத்தைத் தொடர்ந்து `கருப்பு வெள்ளி தின’ புரட்சியாளர்கள்மீது தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. என்றாலும் பேச்சுரிமை எழுத்துரிமை என்பதெல்லாம் இன்னமும் அங்கு கேள்விக்குறியாகவே உள்ளன.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x