

பிரிட்டிஷ் அறிவியல் ஆராய்ச்சி துறையில் மிக உயரிய அமைப்பான ராயல் சொசைட்டியின் தலைவராக நோபல் பரிசு வென்ற வெங்கட ராமன் (வெங்கி) ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1660-ம் ஆண்டு நவம்பரில் ராயல் சொசைட்டி தொடங்கப்பட்டது. உலகின் மிகப் பழைமையான இவ் அமைப்பு, பிரிட்டிஷ் அரசின் அறிவியல் ஆலோசனைப் பிரிவாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டு பொது பட்ஜெட்டிலும் ராயல் சொசைட்டிக்காக கணிச மான தொகை ஒதுக்கீடு செய்யப் படுகிறது.
இந்த அமைப்பில் தற்போது 1,600 விஞ்ஞானிகள் பல்வேறு பிரிவுகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தலைவராக மரபியல் வல்லுநர் பால் நர்ஸ் செயல்படுகிறார். அவரது ஐந்து ஆண்டு பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே புதிய தலைவரைத் தேர்வு செய்ய ராயல் சொசைட்டியின் உறுப்பினர்கள் அண்மையில் கூடி ஆலோசனை நடத்தினர். இதில் வெங்கட ராமன் ராமகிருஷ்ணன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. வரும் டிசம்பர் 1-ம் தேதி அவர் புதிய பதவியை ஏற்கிறார்.
தற்போது கேம்பிரிட்ஜில் உள்ள மூலக்கூறு உயிரியல் துறையின் பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வு கவுன்சில் ஆய்வகத்தின் துணை இயக்குநராக வெங்கடராமன் ராமகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2009-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. டாம் ஸ்டைட்ஸ் மற்றும் அடா யோநாத் ஆகியோருடன் இணைந்து நோபல் பரிசை அவர் பெற்றார். ரிபோசோம்களின் பணி, அமைப்புக்காக மூவரும் நோபல் பரிசினை வென்றனர். அவர்களின் ஆய்வு முடிவுகள் ‘ஆன்டிபயாடிக்’ மருந்து தயாரிப்புக்கு பேருதவியாக உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்தவர்
தமிழகத்தில் உள்ள சிதம்பரம் நகரில் 1952-ல் வெங்கடராமன் ராமகிருஷ்ணன் பிறந்தார். பரோடா பல்கலைக்கழகத்தில் இயற்பி யலில் பிஎஸ்சி பட்டம் பெற்ற அவர் அமெரிக்காவில் உள்ள ஒகிகையோ பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முடித்தார்.
பின்னர் அமெரிக்காவின் சான்டீயாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் உயிரியல் துறையில் இரண்டு ஆண்டுகள் பயின்றார். அதைத் தொடர்ந்து யேல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியா ளராகப் பணியாற்றி னார்.
1999-ம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த எல்எம்பி குழுவின் தலை வராக பணியில் சேர்ந்தார். 2003-ல் ராயல் சொசைட்டி பெல்லோ ஆக தேர்வானார். 2012-ல் சர் பட்டம் பெற்றார். புதிய பொறுப்பு குறித்து வெங்கடராமன் ராமகிருஷ்ணன் கூறியபோது, இந்தப் பதவி எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம் என்றார்.
ராயல் சொசைட்டியில் இது வரை 60 தலைவர்கள் பணியாற்றி உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை ஆகும்.