Published : 31 Mar 2015 10:50 AM
Last Updated : 31 Mar 2015 10:50 AM
ஆப்ரிக்க கண்டத்தில் மிக அதிகமாக பெட்ரோல் கிடைக்கும் நாடுகள் அங்கோலாவும் நைஜீரியாவும்தான்.நைஜீரியாவின் 80 சதவீத அந்நிய செலாவணி பெட்ரோலியம் மூலமாகத்தான் வருகிறது. உலகின் 12-வது மிகப் பெரிய பெட்ரோலியத் தயாரிப்பாளர் நைஜீரியா. 8-வது மிகப்பெரும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடு.
பெட்ரோல் வளத்தினால் கிடைக்கும் லாபத்தில் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்று பலரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். முக்கியமாக நைஜர் டெல்டா பகுதியில் இந்த சண்டை சச்சரவுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. (நைஜர் நதி அட்லான்டிக் கலக்கும் பகுதிதான் நைஜர் டெல்டா).
1956-ல் ஷெல்-பிபி நிறுவனம் இங்கு பெட்ரோலியக் கிணறுகள் எங்கெங்கு உள்ளன என்பதற்கான தேடுதலில் ஈடுபட்டது. ஆனால் அப்போது கூட பெரும்பாலான நைஜீரிய மக்கள் அந்த நிறுவனம் பாமாயில் தொடர்பான தேடுதலில் ஈடுபட்டதாகத்தான் பாமரத்தனமாக எண்ணினார்கள்.
ஒரு வழியாக 1958-ல் நைஜர் டெல்டாவில் முதல் எண்ணெய்க் கிணறு கண்டு பிடிக்கப்பட்டது. நாட்டில் பரலவாக பெட்ரோலிய வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மக்கள் ஒரு வித அச்சம் கலந்த சூழலுக்கு ஆளானார்கள். பெட்ரோலினால் கிடைத்த லாபத்தை யார் பங்கு போட்டுக்கொள்வது என்பதில் பிரச்சினைகள் முளைத்தன.
நாட்டின் வளத்தில் ஒரு பகுதி கூட மக்களுக்குக் கிடைக்கவில்லை. பெட்ரோலிய லாபத்தை அரசு அதிகாரிகளே பங்கிட்டுக் கொண்டார்கள். அதாவது, எந்த பெட்ரோலிய நிறுவனம் தொடங்கினாலும் அதில் பெரும்பாலான பங்குகளை அவர்கள் வாங்கிக் கொண்டார்கள். மேலும் மேலும் பெட்ரோலிய கிணறுகள் கண்டு பிடிக்கப்பட்டன. நீண்ட குழாய்கள் மூலம் பெட்ரோலியம் அண்டை நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
நைஜீரியாவில் கிடைக்கும் பெட்ரோல் கொஞ்சம் வித்தியாசமானது. அதை “இனிப்பு பெட்ரோல்” என்கிறார்கள். அதாவது இங்கு கிடைக்கும் பெட்ரோலியத்தில் சல்பர் கலப்பு இல்லை. அதனால்தான் இந்த வேறுபாடு.
ஆக நைஜீரிய அரசு அதிகாரிகள் பொருளாதரத்தில் கொழித்தபோதிலும் பொது மக்கள் தொடர்ந்து ஏழ்மையில் இருந்தனர்.
நைஜீரிய அரசு பல வெளிநாட்டினருக்குப் பெட்ரோல் கிணறுகளைத் தோண்டவும், பெட்ரோல் வளத்தை அவரவர் நாட்டுக்கு எடுத்துச் செல்லவும் அனுமதி அளிக்கிறது. இதில் குறிப்பிட்ட சதவீத தொகை நைஜீரிய அரசுக்குக் கிடைக்கும்.
எதற்காக வெளிநாட்டினருக்கு இந்த உரிமையை அளிக்க வேண்டும்? நைஜீரிய அரசே தங்கள் நாட்டில் உள்ள பெட்ரோலியக் கிணறுகளைத் தோண்டி முழுப் பலனையும் அடையலாமே என்கிறீர்களா? இதற்கு நிறைய நிதி தேவைப்படும் என்பது ஒரு காரணம்.
அதை விட முக்கியக் காரணம், நைஜீரிய அரசுக்கு என்று வெளிநாட்டினர் அளிக்கும் தொகையில் பெரும் பகுதி அரசில் பங்கு வகிக்கும் விஐபிக்களின் பாக்கெட்டுக்குப் போய் விடுகிறது. பிறகு ஏன் இதை மாற்றியமைக்கப் போகிறார்கள்?
இதன் விளையாக நைஜீரியா தொடர்ந்து வறுமையில் வாடுகிறது. போதாக்குறைக்கு பெட்ரோல் கிணறுகள் விவசாயிகளைப் பெரிதும் பாதித்துக் கொண்டு இருக்கின்றன. அதாவது, பெட்ரோல் கிணறுகள் இருக்க வாய்ப்பு உண்டு என்று கருதிய நிலங்களை எல்லாம் வெளிநாட்டுச் சக்திகள் வளைத்துப் போட்டுவிட்டன. இந்த நிலங்களில் பெரும் பகுதி விவசாய நிலங்கள். ஆக இன்றைய தேதிக்கு நாட்டின் விவசாயமும் அடிபட்டுக் கிடக்கிறது.
அரசிடம் வெறுப்பு. கையிலோ காசு இல்லை. இதனால், உள்ளூர்வாசிகளில் சிலர், வெளியூரிலிருந்து வந்து தங்குபவர்களை முற்றுகையிட்டுப் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். பணத்தைவிட உயிர் முக்கியம்தானே! எனவே, தப்பித்தால் போதும் எனக் கையில் உள்ள பணத்தைக் கொடுத்து விடுகிறார்கள். இதற்காகவே நைஜீரியாவில் உள்ள பல வெளிநாட்டு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு `ரிஸ்க் அலவன்ஸ்’ என்று ஒரு தொகையை மாதா மாதம் அளிக்கின்றன.
வெளிநாட்டு பெட்ரோலிய நிறுவன ஊழியர்களைக் கடத்திச் செல்வது, பெரும் தொகை கிடைத்த பிறகு அவர்களை விட்டுவிடுவது என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இப்படிக் கடத்தப்பட்டவர்கள் யாரும் சித்ரவதைக்கு ஆளானதாகத் தெரியவில்லை என்பதுமட்டும் ஆறுதலான செய்தி.
நைஜர் டெல்டா விடுதலை இயக்கம் என்ற இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள்தான் அதிக அளவில் இதுபோன்ற கடத்தலில் ஈடுபடுகிறார்கள். கடத்தலோடு மட்டும் நின்றுவிடாமல் பெட்ரோல் செல்லும் நிலத்தடிக் குழாய்களை குண்டுவைத்துத் தகர்ப்பது போன்ற வேலைகளிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.
அதென்னவோ நைஜீரியாவில் வடக்குப்பகுதி, தெற்குப் பகுதி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கிறார்கள். இப்படியொரு மாறுதலான ஆட்சி அமைவதை மக்கள் விரும்புகிறார்கள் என்றே தோன்றுகிறது. அப்போதுதான் ஒட்டுமொத்த தேசத்துக்கு நியாயம் வழங்கப்பட்டதாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
போகோ ஹராம் அச்சுறுத்தல் காரணமாக பல மக்கள் முக்கியமாக வடகிழக்குப் பகுதியில் உள்ளவர்கள் - வாக்களிக்க வருவதற்கே அஞ்சும் சூழ்நிலை உள்ளது.
பிப்ரவரி 15, 2015 அன்று அரசியல் கட்சி ஊர்வலம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதில் தானும் கலந்து கொண்டு மனித வெடிகுண்டாக மாறினார் ஒரு தீவிரவாதப் பெண். இது நிலைமையின் தீவிரவாதத்தை மேலும் அழுத்தமாக புலப்படுத்துகிறது.
போகோ ஹராம் இயக்கத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் இயங்குவதாகத் தகவல். இவர்கள் வெறும் எதிர்ப்பாளர்கள் என்றால் சமாளிப்பது அவ்வளவு கஷ்டம் அல்ல. ஆனால் இவர்கள் அனைவருமே மனித வெடிகுண்டுகளாக மாறுவதற்கும் தயாரானவர்கள் என்பதுதான் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.
போதாக்குறைக்கு அண்டை நாடான கேமரூனுக்கும், இந்தத் தீவிரவாதிகளின் ஒரு பகுதியினர் அவ்வப்போது சென்று வருகிறார்கள். அங்கிருந்தும் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 80 பேரைக் கடத்தினார்கள். அவர்களில் 24 நபர்களை பின்பு விடுவித்தார்கள்.
‘தீவிரவாதிகளை அடக்குவதில் அரசு வெற்றி பெறவில்லை. கையால் ஆகாத அரசு’ என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக தொடர்கிறது. “கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தினால் அது அவர்கள் உயிருக்கே ஆபத்தாகி விடுமே, என்ன செய்வது?’’ என்று கைகளைப் பிசைகிறது அரசு. “எதையாவது செய்யுங்கள். உயிரோடு அவர்களை மீட்டுத் தாருங்கள். இது முடியவில்லை என்றால் நீங்கள் அரசாங்கமே அல்ல’’ என்கின்றனர் மக்கள்.
போகோ ஹராம் தலைவரான அபுபக்கர் என்பவர் இந்தப் பெண்களை நாங்கள் விரும்பும் நபர்களுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடுவோம். அல்லது அடிமைகளாக விற்று விடுவோம். அல்லது அவர்களை மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்துவோம் என்று அச்சுறுத்தியிருக்கிறார். ஏற்கெனவே பத்து வயதுச் சிறுமிகளை எல்லாம் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள்தான் போகோ ஹராம் இயக்கத்தினர்.
இயற்கை வரமளித்தாலும் மனிதனின் சுயநலங்கள் அந்த வரங்களையே சாபமாக்கிக் கொள்ளும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது நைஜீரியா.
(உலகம் உருளும்)
Sign up to receive our newsletter in your inbox every day!