

செவ்வாய் கிரகத்தில் நைட்ரஜன் வாயு இருப்பதற்கான தடயங்களை நாசாவின் க்யூரியாஸிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
இதன் மூலம், ஒரு காலத்தில் செவ்வாயில் உயிரினங்கள் இருந்திருக்கலாம் எனும் கருத்துக்கு மேலும் வலு சேர்க்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாயில் உள்ள படிமங்களில் இருந்து வெப்ப மிகுதியால் வெளியாகும் நைட்ரஜன் வாயுவை க்யூரியாஸிட்டி ரோவர் விண்கலம் அடையாளம் கண்டுள்ளது.
இதுகுறித்து நாசா விண்வெளி ஆய்வு மையம் கூறும்போது, "செவ்வாயில் நைட்ரஜன், நைட்ரிக் ஆக்ஸைட் வடிவத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நைட்ரேட்ஸ் எனும் மூலக்கூறுகள் உடைகிறபோது இந்த வாயு வெளிப்படுகிறது.
உயிரினங்களுக்குத் தேவையான நைட்ரஜன் வாயுவை இந்த நைட்ரேட்ஸ் மூலக்கூறுகள் கொண்டிருக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் முந்தைய காலத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை செவ்வாயில் இருந்திருக்கலாம் என்ற கருத்துக்கு வலு சேர்க்கிறது" என்று கூறியுள்ளது.
மரபணுக்களைக் கடத்துகின்ற டி.என்.ஏ., ஆர்.என்.ஏ., போன்ற பெரிய மூலக்கூறுகளைக் கட்டமைப்பதற்கு நைட்ரஜன் பயன்படுகிறது. எனவே அனைத்து வகையான உயிரினங்களுக்கும் நைட்ரஜன் தேவை என்பது குறிப்பிடத்தகுந்தது.