Last Updated : 12 Mar, 2015 10:22 AM

 

Published : 12 Mar 2015 10:22 AM
Last Updated : 12 Mar 2015 10:22 AM

மாறுகிறதா மாலத்தீவு?- 4

முன்னொரு காலத்தில் மாலத்தீவு தேசத்துக்கு தனி முக்கியத்துவம் இருந்தது. இந்தியப் பெருங்கடலில் உள்ள முக்கியமான கடல் வழிகளில் மாலத்தீவும் ஒரு முக்கியப் பகுதியாக இருந்து வந்துள்ளது. பல நூற்றாண்டுகளாகவே அதன் அண்டை நாட்டுக்காரர்களான இந்தியாவும், இலங்கையும் அந்த நாட்டுடன் கலாசார மற்றும் பொருளாதாரத் தொடர்புகள் கொண்டிருந்தார்கள்.

ஆரம்பகால சரித்திரம் என்று பார்த்தால் மாலத்தீவுகளில் முதலில் வந்து தங்கியவர்கள் இந்தியர்கள்தான். மரத்தினாலான வீடுகளில் வசித்தார்கள் என்பதால், காலப்போக்கில் அவை அழிந்து மண்ணோடு மண்ணாகி சான்றுகளைத் துடைத்தெறிந்து விட்டன.

கி.மு.2000-லிருந்தே மாலத்தீவு தனது இருப்பைக் காட்டிக் கொண்டது என்கிறார் கள் சில தொல்லியல் நிபுணர்கள். எகிப்தியர் கள், ரோமானியர்கள், சிந்து சமவெளி வணிகர்கள் போன்ற பலருக்கும் ஓர் வணிக சந்திப்பு மையமாக விளங்கியது. சூரிய வழிபாடு உள்ளூர் மக்களுக்கு இருந்தது. பின்னர் இலங்கையிலிருந்து புத்த மதத்தின ரும், வடமேற்கு இந்தியாவிலிருந்து இந்துக் களும் மாலத்தீவை அடைந்தனர். அப்போது அங்கு பல புத்த ஸ்தூபிகள் எழுப்பப்பட்டன.

பின்னர் புத்தமதத்தினரின் கோட்டையாக விளங்கத் தொடங்கியது. சக்ரவர்த்தி அசோகரின் காலத்தில்தான் புத்தமதம் மாலத் தீவில் நுழைந்திருக்க வேண்டும் என்கிறார் கள். இலங்கையிலிருந்து புத்தமதம் பரவி யிருக்க வேண்டும் என்று கூறும் சரித்திர ஆய்வாளர்களும் உண்டு.

இன்று தொல்லியல் சான்றுகளாக மாலத் தீவில் கிடைப்பதெல்லாம் புத்த ஸ்தூபி களும், புத்தமதத் துறவிகளின் மடாலயங் களும்தான்.

தொலைகிழக்குப் பகுதிகளுக்குச் சென்ற அரேபிய வணிகர்கள், தங்கள் பயணத்தின் நடுவே மாலத்தீவில் தங்கிச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். மாலத்தீவில் கவ்ரி கிளிஞ்சல்கள் (சோழி) நிறைய கிடைத்தன. இவை அரேபியர்களுக்கு மிகவும் பிடித்து விட்டன.

எக்கச்சக்கமாக அள்ளிச் சென்றார்கள். ஒரு கட்டத்தில் சில பகுதிகளில் இந்த கிளிஞ்சல்கள் கூட நாணயமாகப் பயன்பட்டன. இன்றுகூட மாலத்தீவு நாணயங்களில் இந்தக் கிளிஞ்சலின் உருவமும் அச்சிடப்படுகிறது).

ஒருகட்டத்தில் பல சுல்தான்கள் வாரிசு முறையில் மாலத்தீவை ஆட்சி செய்தார்கள். பின்னர் இஸ்லாம் இங்கு வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது.

பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஆதிக்க சக்திகள் இந்தியப் பெருங்கடலில் உள்ள வணிகத்தில் பெரும் பகுதியை தாங்கள் கைவசமாக்கிக் கொண்டார்கள். மாலத்தீவு உள்நாட்டு அரசியலில் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலில் தலையிட்டனர் போர்ச்சுக்கீஸியர்.

ஏற்கெனவே மேற்கிந்தியாவில் இருந்த கோவாவில் அழுத்தமாகவே அவர்கள் காலூன்றி விட்டிருந்தனர். இந்தியப் பெருங்கடலில் லாபத்தை ஈட்டும் வணிக வழித்தடங்களில் தங்களுக்கு நிச்சயம் பங்கிருக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு அவர்கள் ஏற்கனவே வந்திருந்தார்கள்.

உங்களுக்காக சின்னதாக ஒரு கோட்டையும், தொழிற்சாலையும் கட்டிக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்தார் அப்போதைய மாலத்தீவு மன்னர். போர்ச்சுக்கீஸிய ஒட்டகம் மாலத்தீவில் தலையை நுழைத்தது.

விரைவிலேயே போர்ச்சுக்கீஸியர்கள் மாலத்தீவு மீது படையெடுத்தனர். வென்றனர். அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு அவர்கள் ஆட்சிதான் மாலத்தீவில் நடைபெற்றது.

முகம்மது தகுருஃபானு என்பவர் தனது சகோதரர்களையும், நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு மாலே நகரில் ஆட்சி செய்த போர்சுக்கீஸியர் மீது மீண்டும் மீண்டும் கெரில்லாத் தாக்குதல் நடத்தினர். இதில் அத்தனை போர்ச்சுக்கீஸிய ஆட்சியாளர்களும் கொலை செய்யப் பட்டனர்.

இந்த வெற்றியை, அந்த நாளை (சந்திர வருடக் கணக்குப்படி மூன்றாவது மாதத்தின் முதல் நாள்) தேசிய தினமாக இன்றளவும் மாலத்தீவு கொண்டாடுகிறது. முகம்மது தகுருஃபானுவுக்கு ஓர் நினைவகமும் எழுப்பப்பட்டது. இவர்தான் அடுத்த சுல்தான் சாம்ராஜ்யத்தை நிறுவினார்.

உதீமு என்ற பெயர் கொண்ட அந்த சாம்ராஜ்யம் அடுத்த 120 வருடங்களுக்கு மாலத்தீவை ஆட்சி செய்தது. அந்தக் காலகட்டத்தில் நீதித் துறையில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் நடைபெற்றன. பாதுகாப்புப் படையில் கவனம் செலுத்தப்பட்டது.

தென்னிந்தியாவில் கண்ணனூர் பகுதியைச் சேர்ந்த ராஜாக்கள் தொடக்கத் தில் முகம்மது தகுருஃபானுவுக்கு ராணுவ உதவி செய்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு தங்களுக்கும் மாலத்தீவு ஆட்சியில் பங்கு இருந்தால் நல்லது என்று யோசிக்கத் தொடங்கினார்கள். போதாக்குறைக்கு போர்ச்சுக்கீஸியர்களும் அடிக்கடி தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

பிறகு டச்சுக்காரர்கள், அதற்குப் பிறகு பிரெஞ்சு என்று பலரும் முற்றுகையிடத் தொடங்கினர். என்றாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டனின் பாதுகாப்பில் அமைந்த நாடுகளில் ஒன்றாக மாலத்தீவு தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. பிரிட்ட னும் போனால் போகிறது என்று மாலத்தீவை ஆண்டு வந்த அடுத்தடுத்த மன்னர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கியது.

(இன்னும் வரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x