

பேரிடரை தடுப்பது ஒவ்வொருவரின் கடமை என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தினார்.
பேரிடர் ஆபத்துகளை தடுப்பது தொடர்பான ஐ.நா. சர்வதேச மாநாடு, ஜப்பான் நாட்டின் சென்டாய் நகரில் நேற்று தொடங்கியது.
இம்மாநாட்டில் கடல் நீர்மட்டம் உயர்வு மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் இயற்கை சீற்றங்கள் குறித்து பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்கள் தங்கள் கவலையை பகிர்ந்துகொண்டனர்.
பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான வனுவாட்டுவின் அதிபர் பால்டுவின் லான்ஸ்டேல் பேசும்போது, சக்திவாய்ந்த புயலால் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் நாட்டுக்கு சர்வதேச சமூகம் உதவவேண்டும். பருவநிலை மாற்றம், கனமழை, சூறாவளி போன்ற பேரிடர்களை தற்போது அதிகம் எதிர்கொள்கிறோம்” என்றார்.
மைக்ரோனேசியா தீவுகளின் அதிபர் இம்மானுவேல் மோரி பேதும்போது, “எங்கள் நிலப்பகுதி சிறு சிறு பகுதிகளாக இருப்பதும், மக்கள் ஆங்காங்கே பிரிந்து வாழ்வதும் மிகப்பெரிய பாதகமாக உள்ளது. பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் கரியமில வாயு வெளியேற்றத்தை தடுக்க உலக நாடுகள் விரைந்து செயல்படவேண்டும்” என்றார்.
மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் பேசும்போது, “பேரிடர் ஆபத்துகளை தடுப்பது ஒவ்வொருவரின் கடமை. பருவநிலை ஏற்படுத்தும் பேரிடர்களில் இருந்து காத்துக்கொள்ள சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் கூடுதல் உதவிகளும் அவசியம். பசிபிக் தீவுகளுக்கு பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்புவதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்” என்றார்.