

ப்ளாக் எனப்படும் வலைப்பதிவு சேவை வழங்கும் வேர்ட் பிரஸ் (Wordpress.com) இணையதளம், பாகிஸ்தானில் முடக்கப்பட்டுள்ளது.
இணையப் பிரியர்கள் தங்களதுச் சிந்தனைகளை வெளிப்படுத்த உதவும் 'வோர்ட் ப்ரஸ்' இணையதளம் ஞாயிற்றுக்கிழமை முதல் பாகிஸ்தான் எங்கும் இயங்கவில்லை.
ஆனால், இந்த இணையதளத்துக்கு தடை விதிக்கப்பட்டதுக்கான அறிவிப்பை பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் தெரிவிக்காத நிலையில், இந்த இணைதளம் முடக்கப்பட்டதா... இல்லையா என்று அறியப்படவில்லை என்று டான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான மக்கள் வலைப்பதிவுகளை ஏற்படுத்தி வைத்துள்ளனர். சிந்தனைகளை பகிரவும் தொழில் ரீதியான பயன்பாட்டுக்கும் வலைப்பதிவுகள் உதவுகின்றன. இந்த முடக்கத்தால் வலைப்பதிவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் பிரபல வீடியோ பகிர்வு இணையதளமான யூடியூப் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியத்துக்கு எதிரான பகிர்வுகள் இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.