

இஸ்ரேல் அதிபர் ரூவன் ரிவ்லினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூரில் நேற்று சந்தித்துப் பேசினார்.
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் இறுதிச் சடங்கில் மோடியும் ரூவனும் பங்கேற்றனர். இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினர். அப்போது இஸ்ரேலுக்கு வருமாறு மோடிக்கு ரூவன் அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறியபோது, மோடியின் இஸ்ரேல் பயணம் குறித்து இருநாட்டு அதிகாரிகளும் கலந்து பேசி தேதிகள் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் ஐ.நா. மாநாட்டில் பங்கேற்ற மோடியும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் முதல்முறையாக சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.