

இன்றைய உலகின் மிக உயர்ந்த தலைவர்களில் லீ குவான் யூவும் ஒருவர் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நேற்று நடை பெற்ற லீயின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
லீயின் வாழ்க்கை ஒரு சகாப்தம். அவர் ஒரு சர்வதேச சிந்தனையாளர். சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டவர்.இந்தப் பிராந்தியத்தில் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்காகவும் அயராது பாடுபட்டவர். லீ உடனான நட்புறவை இந்தியா பெரிதும் மதித்தது. இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் உறுதுணையாக விளங்கினார். இந்தியாவின் கிழக்கத்திய பார்வை வெளியுறவு கொள்கையில் சிங்கப்பூருக்கு முக்கிய இடம் அளித்துள்ளோம்.
எனது தனிப்பட்ட வாழ்க்கையின் உந்துசக்தியாக லீ விளங்குகிறார். அவரது சாதனைகள் எனக்கு உத்வேகம் அளிக்கிறது. அவரைப் பின்பற்றி இந்தியாவிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறேன். லீயின் மறைவு சிங்கப்பூருக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் இழப்புதான். அதனால்தான் அவரது மறைவை இந்தியாவிலும் துக்க தினமாக அனுசரிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.