கிளர்ச்சியாளர்கள் சரணடையும் வரை ஏமனில் தாக்குதல் தொடரும்: சவுதி திட்டவட்டம்

கிளர்ச்சியாளர்கள் சரணடையும் வரை ஏமனில் தாக்குதல் தொடரும்: சவுதி திட்டவட்டம்
Updated on
1 min read

ஏமனில் ஆதிக்கம் செய்ய நினைக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளகள் தானாக முன் வந்து சரணடையும் வரை நடந்து வரும் தாக்குதல் முடிவுக்கு வராது என்று சவுதி அரேபியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஏமனில் சவுதி அரேபியப் படைகள் நடத்தும் போர் 5-வது நாளாக நீடிக்கிறது. தலைநகர் சனாவில் இன்று (திங்கள்கிழமை) காலை தாக்குதல் நடத்தப்படாத நிலையில் ஹவுத்தி கிளர்ச்சிப் படையினர் சரணடையும் வரை அவர்கள் மீதான போர் தொடரும் என்று சவுதி அரேபிய திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தாக்குதல்கள் அங்கு இரவு நேரங்களில் மட்டும் நடத்தப்படுகிறது.

சவுதிப் படைகளின் தாக்குதல் தலைநகர் சனாவில் இருக்கும் தூதரகங்களை குறி வைத்து நடத்தப்படுவதாக பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.

சவுதி படையின் தளபதி அகமது பின் அஸிரி கூறும்போது, "ஞாயிற்றுகிழமை தாக்குதலில் ஹவுத்தியின் தரைப் படைகள் பல அழிக்கப்பட்டுவிட்டன. உள்நாட்டில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களே காரணம். பொதுமக்கள் வாழும் பகுதிகளில் உள்ள உயர்ந்த கட்டடங்கள் மீது விமான தடை பேட்டரிகளை அவர்கள் பொருத்தி, எங்களை அந்த பகுதிகளில் குண்டு வீச வைக்கின்றனர்.

இதனால் தான் பொதுமக்களுக்கு இழப்பு நேரிடுகிறது. இதனை அவர்கள் திட்டமிட்டு செய்கின்றனர்" என்றார்.

ஹவுத்தி தரப்பில் இதற்கான பதில் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், ஏமனில் தற்போதைய நிலையில் அமைதி சூழல் ஏற்பட வாய்ப்பில்லாததாகவே தெரிகிறது.

இதனிடையே ஏமன் உள்துறையின் அதிகாரபூர்வ தகவலின்படி, வெள்ளிக்கிழமை வரை தாக்குதலில் சிக்கி 39 பேர் பலியாகி உள்ளனர். அடுத்தடுத்த நாட்களிலான தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்ததாக உள்துறை சார்பில் ஞாயிற்றுகிழமை தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சில உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏமன் அதிபருக்கு ஆதரவாக காஸாவின் ஹமாஸ் படையினர்:

ஏமன் தலைநகர் சனாவை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி அந்த அரசை முழுவதுமாக செயலிழக்க செய்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு, காஸாவின் ஹமாஸ் படையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "ஏமன் அதிபர் ஹைத்திக்கு ஆதரவாகவே நாங்கள் இருக்கிறோம். ஏமன் மக்களுக்கு ஆதரவான பக்கமே நாங்கள் இருக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in