

பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்து வரும் போதிலும், பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை இந்த ஆண்டு 10 சதவீதம் அதிகரிக்க உள்ளது சீனா.
அமெரிக்காவுக்கு இணையாக தனது ராணுவத்தை நவீனப்படுத்தும் முயற்சியாக ராணுவ செலவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது சீனா. இந்தியாவின் ராணுவ ஒதுக்கீடு 4,000 கோடி டாலர்களாக இருந்து வரும் வேளையில், சீனாவின் இந்த ஆண்டு ராணுவ ஒதுக்கீடு 14,500 கோடி டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீன நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் ஃபூ-யிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “சீனாவின் ராணுவ பட்ஜெட் ஒதுக்கீடு கடந்த ஆண்டு 12.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 10 சதவீதம் அதிகரிக்கப்படும். துல்லியமான தொகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்” என்றார்.
சீனா தனது ராணுவ ஒதுக்கீட்டை தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 10 சதவீதம் உயர்த்தும் போதிலும் கடந்த 5 ஆண்டுகளில் இதுவே மிகக் குறைந்த உயர்வு என சீன அரசின் ஜின்குவா செய்தி நிறுவனம் கூறுகிறது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 7.4 சதவீதமாகக் குறைந்தது. வரும் ஆண்டில் இது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.