

ஏமனில் விமான நிலையம் மீதான தாக்குதலில் கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த 15 பேர் பலியானதாக ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவின் விசுவாசிகளான ஷியா பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு தலைநகர் சனாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து இப்போதைய அதிபர் தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு சவூதி அரேபியா ராணுவம் ஆதரவு அளித்து வருகிறது. சனாவில் உள்ள சர்வதேச விமான நிலைய ஓடுபாதை மீது சவூதி போர் விமானங்கள் 4-வது இரவாக நடத்திய தாக்குதலில் விமான நிலையம் சேதமடைந்தது. இதில் 15 கிளர்ச்சியாளர்கள் பலியாகி உள்ளனர்.
ஏமனில் நடைபெறும் உள்நாட்டுப் போர் காரணமாக அங்குள்ள இந்தியர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தாங்கள் ஏமனை விட்டு வெளியேற உதவுமாறு இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 60 பேர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தாங்கள் வசிக்கும் பகுதியில் அடிக்கடி வெடி சத்தமும், துப்பாக்கி சத்தமும் கேட்பதால் பீதியடைந்து கடந்த 5 நாட்களாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 2 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் குடிநீர் மட்டுமே கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வெளி உலகத்தைத் தொடர்பு கொள்வதற்கு இப்போதைக்கு இன்டர்நெட் மட்டுமே உதவுவதாகவும், அதுவும் எந்த நேரத்திலும் துண்டிக்கப்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியர்களை மீட்க நடவடிக்கை
ஏமனில் 3,500 இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நர்ஸ்கள். போர் காரணமாக அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்தியர்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சனாவிலிருந்த 80 இந்தியர்கள் நேற்று முன்தினம் ஜிபூட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று கூறும்போது, “ஏமனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தலைநகர் சனாவிலிருந்து தினமும் 3 மணி நேரம் விமானம் பறப்பதற்காக அந்நாட்டு அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஏர் இந்தியா விமானம் மூலம் அங்குள்ள இந்தியர்கள் மீட்கப்படுவார்கள்” என்றார்