

பாகிஸ்தானில் 2 தேவாலயங்களில் தலிபான் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 போலீஸார் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். 80 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அதிபர் மம்னூன் ஹுசைன் ஆகியோர் கண்டனம் தெரிவித் துள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத் தலைநகர் லாகூரில் கிறிஸ்தவர்கள் பெரும் பான்மையாக வசிக்கும் யூகனாபாத் பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக் சர்ச் மற்றும் கிறிஸ்ட் சர்ச் ஆகியவை நேற்று தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த தேவாலயங்களில் ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தேவாலயங்களில் நுழைய முயன்ற இருவரை அங்கிருந்த போலீஸார் மற்றும் உள்ளூர் காவ லர்கள் தடுத்து நிறுத்தியபோது, அவர்கள் குண்டை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பை தொடர்ந்து மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேற முயன்றதில் நெரிசலும் ஏற்பட்டது.
குண்டு வெடிப்பில் சிறுவர், சிறுமிகள், இரு காவலர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். பெண்கள், குழந்தைகள் உட்பட 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே குண்டுவெடிப்பை தொடர்ந்து, தீவிரவாதிகளுடன் வந்தவர்கள் என்று கூறப்படும் இருவரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கி உயிரோடு கொளுத்தியது. இருவரும் உடல் கருகி பலியாயினர்.
‘தஹ்ரீக்-இ-தலிபான்’ பாகிஸ் தான்’ என்ற அமைப்பில் இருந்து பிரிந்து செயல்படும் ‘ஜமாத் உல் அஹ்ரார்’ என்ற அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
கண்டனம்
இந்நிலையில் சிறுபான்மை யினரை பாதுகாக்க பாகிஸ்தான் அரசு தவறிவிட்டது என்பதையே லாகூர் தாக்குதல் சம்பவங்கள் நிரூபிக்கின்றன என்று பாகிஸ்தான் சிறுபான்மையினர் கூட்டணியின் தலைவர் தாஹிர் நவீத் சவுத்ரி கண்டித்துள்ளார்.
பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தினர் நீண்ட காலமாகவே தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றனர்.
2013-ல் பெஷாவர் நகரின் கோஹதிகேட் பகுதியில் உள்ள ஆல் செயின்ட்ஸ் தேவாலயத்தில் நடந்த இரட்டை மனிதகுண்டு தாக்குதலில் 80 பேர் கொல்லப் பட்டனர்.