Last Updated : 09 Mar, 2015 08:56 PM

 

Published : 09 Mar 2015 08:56 PM
Last Updated : 09 Mar 2015 08:56 PM

மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370: பணியின் போது தூங்கிய வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி

உலகை உலுக்கிய மலேசிய விமானம் எம்.எச்.370 மாயமான விவகாரம் தொடர்பான இடைக்கால அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையில், விமானம் மாயமாகும் அந்தப் பயங்கரத் தருணங்களின் போது வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு கண்காணிப்பாளர் பணியின் போது உறங்கியதாக அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கும், மலேசிய ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல் வெளியாகியுள்ளது. இதில், விமானத்தின் தொடர்பு அறுந்த நேரமான அதிகாலை 1.20 மணியிலிருந்து காலை 5.20 மணிவரையிலான காலக்கட்டத்தில் வான்வழிக் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கண்காணிப்பாளர் உறங்கிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டுப்பாட்டாளர் காலை 5.20 மணிக்கு மலேசிய ஏர்லைன்ஸ் அதிகாரியுடன் 4 நிமிட நேர உரையாடல் செய்துள்ளார். அப்போது மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரி திரும்பத் திரும்ப விவரங்களைக் கேட்டிருக்கிறார். ஆனால், அந்த கட்டுப்பாட்டாளரோ, இருங்கள் நான் எங்கள் கண்காணிப்பு அதிகாரிய்யை எழுப்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதாவது தான் அதிகாலை 3 மணியளவில்தான் தகவல்தொடர்பு கோபுரத்தின் கட்டுப்பாட்டைக் கையாண்டதாகவும் அதனால் விவரங்கள் பற்றி உறுதியாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்: "நான் சூப்பர்வைசரை எழுப்பி மீண்டும் சரிபார்க்கக் கோருகிறேன், கடைசி தொடர்பு பற்றிய விவரம் என்னவென்று நான் அவரிடம் கேட்கிறேன்...” என்று அவர் கூறியதாக ஸ்டார் ஆன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

வியட்நாமின் ஹோ சி மின் நகர வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை, ஏன் தங்கள் பகுதிக்குள் இன்னமும் விமானம் வரவில்லை என்ற கேள்வியைக் கேட்க 20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது, ஆனால் சர்வதேச உடன்படிக்கைகளின் படி 2 நிமிடங்களில் இந்த கேள்வி எழுந்திருக்க வேண்டும். என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீருக்கடியில் விமானம் சென்றால் அதனை கண்டுபிடிக்க உதவும் லோகேட்டரின் பேட்டரி 2012-ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்டது என்றும் இந்த இடைக்கால அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த இடைக்கால அறிக்கை 600 பக்கங்கள் கொண்டது. எங்கே சென்றது இந்த விமானம்? தொடர்கிறது புதிர்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x