

பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹமீது மிர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பத்திரிகையாளர் ஒருவர் பஞ்சாப் முதல்வர் ஷபாஸ் ஷரிஃப் மீது ‘ஷூ' வீசினார்.
லாஹூரில் 'பியர்ல் கான்டினென்டல்' விடுதியில் சார்க் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட தெற்காசிய தொழிலாளர் மாநாட்டில் பஞ்சாப் முதல்வர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, ‘ஆவாஸ்’ இணைய தொலைக்காட்சி செய்தியாளர் இம்தாத் சதீர் என்பவர், தனது ‘ஷூ'வைக் கழற்றி முதல்வரை நோக்கி எறிந்தார்.
"ஹமீது மிர்ரைத் தாக்கியவர்களைக் கைது செய்ய உங்கள் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று கூறிக்கொண்டே தனது காலணியை வீசினார். எனினும், அது முதல்வர் மீது படாமல், அவர் நின்றிருந்த இடத்திற்குச் சற்று முன்பாக விழுந்தது.
இதை எதிர்பாராத முதல்வர், கோபம் அடையாமல், "கருத்துரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. ஒரு பத்திரிகையாளரின் செயலை வைத்து பத்திரிகையாளர் சமூகத்தையே குற்றம் சாட்டுவது தவறு" என்றார்.
மேலும் அவர், ஹமீது மிர் மீதான தாக்குதலை தனது அரசு கண்டித்திருப்பதாக கூறியது மட்டுமல்லாமல், தன் மீது ‘ஷு' எறிந்தவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.