

சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் எழுத்துக்களைப் புகழ்ந்த தென் ஆப்பிரிக்க பெண் எழுத்தாளர் ப்ரியா தாலா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 20-ஆம் தேதி பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நாட்டு எழுத்தாளர் ஸைனுப் ப்ரியா தாலா, எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்தாக்கங்கள் குறித்துப் பேசினார். அப்போது அங்கிருந்த குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் வெளியேறினர்.
இந்த நிலையில் நிகழ்ச்சி நடந்து முடிந்த அடுத்த நாள், வீட்டில் இருந்த ப்ரியா தாலா மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் ஜன்னல் வழியாக செங்கற்களை வீசியும், வீட்டினுள் அத்துமீறி நுழைந்து அவரது கழுத்தில் கத்தி முனையை வைத்து மிரட்டி தகாத முறையில் பேசியதாக தென் ஆப்பிரிக்காவின் 'தி சண்டே டைம்ஸ்' பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாலாவின் முகம், கழுத்துப் பகுதியில் பலமான காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து தாலா கூறும்போது, "வெப்பமாக இருந்ததால் ஜன்னல்களை திறந்து வைத்திருந்தேன். திடீரென்று வந்த நபர்கள் இப்படி செய்துவிட்டார்கள். என்னால் அவர்களை அப்போது எதிர்க்க முடியவில்லை.
எனக்கு ஒன்றுமில்லை என்று கூறிவிட முடியும். ஆனால் இது பயங்கரமான தாக்குதல் தான். வலி இருக்கிறது. அதனை தாண்டிய கோபமும் இருக்கிறது" என்று தாலா தெரிவித்திருக்கிறார்.
இந்த தாக்குதலுக்கு சல்மான் ருஷ்டி வருத்தம் தெரிவித்துள்ளார். "இது குறித்து கேட்டதும் வருத்தமடைந்தேன். நீங்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ப்ரியா தாலாவின் முதல் புத்தகம் தென் ஆப்பிரிக்காவில் வெளியாக தயாராகி வருகிறது. இதற்கும் அங்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.