

மியான்மரில் ராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவமனை மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையை குறிவைத்து, ஆளும் மியான்மர் ராணுவத்தின் போர் விமானம் புதன்கிழமை இரவு வான்வழி தாக்குதல் நடத்தியதாக மியான்மர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அராக்கன் படை எனப்படும் கிளர்ச்சி குழுவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் இந்த மருத்துவமனை செயல்பட்டு வந்தது. ராணுவ விமானம் வீசிய இரண்டு குண்டுகளில் மருத்துவமனையை தாக்கின.
இந்தத் தாக்குதலில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட 34 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் 17 ஆண்களும், 17 பெண்களும் அடங்குவர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையின் கட்டடங்கள், வாகனங்கள் கடும் சேதமடைந்தன.
கடந்த 2021-ம் ஆண்டு ராணுவ ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, மியான்மர் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்தச் சூழலில், ஒரு மருத்துவமனையை குறிவைத்துத் தாக்கிய ராணுவத்தின் செயல் மனித உரிமை மீறல் என ஐ.நா. மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும், இந்தத் தாக்குதல் குறித்து மியான்மர் ராணுவம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.