Last Updated : 04 Feb, 2015 10:42 AM

 

Published : 04 Feb 2015 10:42 AM
Last Updated : 04 Feb 2015 10:42 AM

உருக்குலைகிறதா உக்ரைன்?- 3

கம்யூனிஸத்தை மிக அதிக அளவில் சோவியத் ஆட்சி அறிமுகப்படுத்தியபோது ரஷ்யர்கள் அல்லாத பல இனங்களைச் சேர்ந்தவர்கள் அந்த நாட்டில் பாதிக்கும்மேல் வசித்தனர். அவர்கள் தங்கள் இனங்கள் ரஷ்யர்களுக்கு கீழாக எண்ணப் படுவதை விரும்பவில்லை.

அடுத்த மிக முக்கிய காரணம் சோவியத் யூனியனின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்காவுடன் அது நேரடியாக வும், மறைமுகமாகவும் புரிந்து கொண்டிருந்த யுத்தங்கள்.

1985-ல் கோர்பஷேவ் பதவி யேற்றபோதே உடனடியாக சீர் திருத்தங்களைச் செய்யவில்லை யானால் சோவியத் பிளவுபடும் என்பதை உணர்ந்தார். “க்ளாஸ் நாஸ்ட்’’ (Glasnost) என்ற கொள் கையை அறிமுகப்படுத்தினார். இது சோவியத் யூனியன் மக்களுக் குப் பேச்சுரிமையை அளித்தது. மற்றொருபுறம் `பெரெஸ்ட் ரோய்கா’’ (Perestroika) என்ற பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

ஆனால் புதிய பேச்சுரிமை, ஆட்சிக்கு எதிரான கருத்துகளை பீறிட்டெழ வைத்தது. பொருளா தாரக் கொள்கையோ உடனடி பலனைத் தரவில்லை. சோவியத் மக்கள் கோர்பசேவ் அரசை வெளிப்படையாகவே விமர்சிக்கத் தொடங்கினர்.

சோவியத் யூனியனின் பிளவு அதன் எல்லைப் பகுதிகளிலிருந்து தொடங்கியது.

எஸ்டோனியா அரசு தன்னாட்சியை விரும்பியது. அடுத்தடுத்து லிதுவேனியா, லாட்வியா, உக்ரைன் போன்ற பகுதிகளும் சுதந்திரம் கேட்கத் தொடங்கின. ஆங்காங்கே சிறிய அளவில் புரட்சிகள் வெடித்தன. மத்திய ஆட்சி இந்த இயக்கங் களால் பலவீனம் அடைந்தது. குடியரசுகளின் ஒத்துழைப்பு கேள்விக்குறியானது.

தீவிர கம்யூனிஸ்ட்கள் கோர்பஷேவ் மீது கடும் கோபம் கொண்டனர். கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதால்தான் இந்த நிலை என்ற ஆத்திரத்தில் அவர்கள் கோர்பஷேவைக் கடத்தினர். பின்பு அவர்கள் அரசு தொலைக் காட்சியில் தோன்றி “கோர்பஷேவ் உடல் நலம் இழந்துவிட்டார். அவரால் இனி ஆட்சி செய்ய முடியாது’’ என்றனர்.

சோவியத் மக்களுக்கு பலத்த அதிர்ச்சி. பல நகரங்களில் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடந்தன. ராணுவத்தின் உதவியும் கிடைக் காத நிலையில் தீவிர கம்யூ னிஸ்ட்கள் தாங்களாகவே கட்டாயமாகப் பறித்த ஆட்சியை விட்டு நீங்க நேர்ந்தது. கோர்பஷேவ் ஆட்சியில் `ஒப்படைக்கப்பட்டார்’.

எனினும் 1991 டிசம்பர் 25 அன்று அவர் ராஜினாமா செய்ய, அடுத்த ஆண்டு தொடக்கத்தி லேயே சோவியத் யூனியன் என்ற பெயர் உலக வரைபடத்திலிருந்து நீக்கப்பட்டது. “சுதந்திரக் குடியரசு களின் காமன்வெல்த்’’ என்ற புதிய பொது பெயர் சூட்டப்பட்டது. இவற்றில் பெரும்பாலும் சுதந்திர நாடுகள்தான். சில நாடுகள் மட்டும் ரஷ்யாவுடன் இணைந்து கொண்டன. உக்ரைன் தனி நாடாகியது.

சோவியத் யூனியன் பிரிந்த பிறகு உண்டான சில விளைவுகள் மிக முக்கியமானது. சர்வதேச சட்டங்களின்படி சோவியத் யூனியனின் வாரிசாக ரஷ்யாதான் கருதப்படும். இதற்கு மிக ஆழமான அர்த்தங்கள் உண்டு. இதற்குமுன் ஐ.நா.வில் வீட்டோ அதிகாரம் கொண்டதாக விளங்கியது சோவியத் யூனியன். பிளவுக்குப் பின் (சோவியத் நாடுகளில்) ரஷ்யாவுக்கு மட்டுமே அந்த அதிகாரம் தொடரும்.

அதுமட்டுமல்ல சோவியத் யூனியனிடம் இருந்த அத்தனை அணு ஆயுதங்களும் ரஷ்யா வுக்குதான். உக்ரைனும் தன்னிடமிருந்த அணு ஆயுதங் களை 1994-ல் ரஷ்யாவிடம் ஒப்படைத்தது.

சோவியத் யூனியன் பிளவு பட்டவுடன் பதினைந்து தனித்தனி சுதந்திர நாடுகள் உருவாயின. அவை அர்மேனியா, அஜெர்பை ஜான், பெலாரஸ், எஸ்டோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், கிரை ஜிஸ்தான், லட்வியா, லிது வேனியா, மோல்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் உக்ரைன்.

பிளவுக்குப் பிறகும் இந்த நாடுகளில் பலவும் ஒன்றோ டொன்று பொருளாதார இணைப் பில் உள்ளன. சிலவற்றில் ஜன நாயகமும், சிலவற்றில் சர்வாதி காரமும் நடக்கிறது.

வேறொரு விதத்திலும் ரஷ்யா ஸ்பெஷல்தான். அதன் எல்லைக்குள் இப்போதுகூட சில சின்னச்சின்ன முன்னாள் குடியரசுகள் உள்ளன. இதன் காரணமாக ரஷ்யாவை ரஷ்யக் கூட்டமைப்பு என்று குறிப்பிடு கிறார்கள்.

ஏற்கெனவே கூறிய வரலாற்றுக் காரணங்களினால் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் மோதல் போக்கு நிலவுகிறது. அதேசமயம் உக்ரை னுக்குள்ளேயே இது தொடர்பாக வேறுபாடுகள் ஒலிக்கத் தொடங்கின.

மேற்கு உக்ரைனில் உள்ளவர் கள் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக விரும்புகிறார்கள். இதனால் பொருளாதார வாய்ப்பு கள் அவர்களுக்கு அதிகமாகும். அதைவிட முக்கியமாக தேவைப் படும்போது பிற நாடுகளில் குடியேறும் வாய்ப்பும் அவர் களுக்கு அதிகமாகும். உக்ரைன் இரண்டாகப் பிளவுபட்டாலும் இவர்களுக்குச் சந்தோஷம்தான். இதையெல்லாம் ரஷ்யா கைகட்டி வேடிக்கை பார்க்குமா?

அமெரிக்காவுக்கும், ரஷ்யா வுக்குமான பனிப்போர் முடிந்து விட்டது என்று நினைத்தவர் களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத் திருக்கிறது உக்ரைன் விவகாரம். பனிப்போரையும் தாண்டி கொஞ்சம் வெளிப்படையாகவே மோதத் தொடங்கியுள்ளன அமெரிக்காவும், ரஷ்யாவும்.

கிரிமியா என்ற உக்ரைன் பகுதி தங்களுக்கானது என்கிறது ரஷ்யா. எனினும் கிரிமியா யாருக்குச் சொந்தம் என்பதற்காக ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ரஷ்யாவோடு போரிட வாய்ப்பில்லை என்று தோன்று கிறது - குறைந்தது வெளிப் படையாக.

அமெரிக்கா எதற்கு உக்ரைன் விஷயத்தில் இவ்வளவு குரல் கொடுக்க வேண்டும்? ஏதோ ஒரு சிறிய நாடு தொடர்பான பிரச்னை இது என்று அமெரிக்காவால் விடமுடியவில்லை.

ரஷ்யாவின் அதிகாரம் அதிகமாவதை அதனால் சகித்துக் கொள்ள முடியாது. தவிர ஆர்க்டிக், பசிபிக், ஈரான் என்று பல கோணங்களில் உக்ரைன் பிரச்னையை அணுகுகிறது அமெரிக்கா.

(இன்னும் வரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x