

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 129 பள்ளி மாணவிகள் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று நைஜீரிய பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நைஜீரியாவின் சிபோக் பகுதியில் உள்ள போர்னா என்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குள் நேற்று புகுந்த தீவிரவாதிகள் அதன் விடுதிக்குள் இருந்த சுமார் 129 மாணவிகளை பலவந்தமாக வாகனங்களில் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
போர்னா பகுதியின் ஆளுநர், பெண்கள் மேல் நிலைப் பள்ளியை சேர்ந்த 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் குறித்து உரிய தகவல் அளிப்பவர்க்ளுக்கு சன்மானம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பள்ளி மாணவிகளில் 107 பேர் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாகவும், சில மாணவிகளை நேற்று மாலை விடுவித்துவிட்டதாக தீவிரவாதிகள் தகவல் அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர்.
அத்துடன் நேற்று தீவிரவாதிகள் கடத்தி செல்லும் வழியிலேயே சில மாணவிகள் ஜீப்பில் இருந்து கீழே குதித்து தப்பி சென்றுவிட்டதாக நைஜீரிய ராணுவ தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
ஆனால், இன்று இது குறித்து போர்னா நைஜீரிய பள்ளியின் முதல்வர் கூறுகையில், "கடத்தப்பட்ட மாணவிகள் குறித்து இதுவரை எந்த தகவலும் அறியப்படவில்லை. மாணவிகள் விடுவிக்கப்பட்டதாக ராணுவம் சார்பில் ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை. நாங்கள் அனைவரும் மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று இறைவனை பிராத்தித்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
நைஜீரியாவில் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்ததாக கருதப்படும் பகுதிகளில் மாணவிகளை தேடும் பணியை அதன் அரசு முடக்கி விட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளின் கல்வி முறை பெரும் பாவம் என்று கூறி அதனை தீவிரமாக எதிர்த்து வரும் போக்கோ ஹரம் அமைப்பினர், சமீப காலமாக பள்ளிகள் மற்றும் மாணவர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.