Published : 05 Feb 2015 11:05 AM
Last Updated : 05 Feb 2015 11:05 AM

உலக மசாலா- சந்தோஷமாக இருந்தால்தான் புக்கைத் திறக்க முடியும்!

ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு அதைப் பற்றி விமர்சிப்பது நல்ல வழி. ஆனால் புத்தகத்தைப் படிக்காமலேயே ஒரு முன் முடிவோடு செயல்படுபவர்களுக்காக ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறது ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த க்ரியேடிவ் ஸ்டுடியோ.

புத்தகத்தை வாங்கியதும் மகிழ்ச்சியோடு திறந்தால் அந்தப் புத்தகத்தை உங்களால் படிக்க முடியும். உங்கள் முகம் வெறுப்பைக் காட்டினால் புத்தகத்தைத் திறக்க முடியாது. புத்தகத்தின் அட்டையில் பொருத் தப்பட்டுள்ள கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் முகத்தை ஸ்கேன் செய்துவிடுகிறது. சந்தோஷமாக இருந்தால் புத்தகத்தைத் திறக்கிறது, இல்லாவிட்டால் திறக்க முடியாமல் செய்து விடுகிறது!

அட! எப்படியெல்லாம் தொழில்நுட்பம் வளர்ந்து வருது!

டெட்ராய்டில் வசிக்கிறார் 56 வயது ஜேம்ஸ் ராபர்ட்சன். அவர் வசிப்பிடத்துக்கும் அவர் வேலை செய்யும் அலுவலகத்துக்கும் பேருந்து வசதிகள் இல்லை. இதனால் தினமும் 34 கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடக்கிறார் ஜேம்ஸ். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் பேருந்து வசதியை நீக்கிவிட்டனர்.

அதிலிருந்து வெயில், பனி, மழை போன்ற எந்தப் பாதிப்பையும் பொருட்படுத்தாமல் நடந்து வருகிறார் ஜேம்ஸ். 12 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் அலுவலகம் வருகிறார். தினமும் அவர் நடந்து செல்வதைப் பார்த்து விசாரித்தவர்கள் அதிச்சியடைந்து விட்டனர். செய்தி வெளியில் பரவியது. ஜேம்ஸுக்கு கார் வாங்குவதற்காக நிதி திரட்டுகின்றனர். சிலர் தினமும் இலவசமாக காரில் அலுலகத்துக்குச் சென்று விடுவதாகச் சொல்கின்றனர். முகம் தெரியாதவர்களின் அன்பை நினைத்து உருகிப் போயிருக்கிறார் ஜேம்ஸ்.

அடப்பாவமே… இப்படியும் ஒரு மனிதரா!

கென்யாவில் உள்ள மாசை மாரா வனப் பகுதியில் சிங்கங்கள் வசித்து வருகின்றன. காட்டு ராஜாவாக கம்பீர நடை போட்டு குடும்பத்தோடு வந்த சிங்கம், காட்டெருமைகளைக் கண்டு ஆனந்தம் கொண்டது. ஓர் எருமையைத் தாக்க முயன்றது. உடனே காட்டெருமைக் கூட்டம் ஆக்ரோஷத்தோடு சிங்கத்தை விரட்ட ஆரம்பித்தது.

பயந்து போன சிங்கம், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள குடும்பத்தோடு ஓட்டம் பிடித்தது. பசி, ஏமாற்றம், உயிர் பயம் நிறைந்த சிங்கங்களின் உணர்ச்சிகளை வீடியோவாக எடுத்திருக்கிறார்கள்.

ஒற்றுமையே பலம்!

பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் கடல் மட்டத்திலிருந்து 9 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு தங்கும் விடுதி அமைக்கப்பட்டி ருக்கிறது. கண்களுக்கு எட்டிய தூரம் வரை பனி போர்த்திய மலைகள் தெரியும் இந்த இடத்தில், கேபிள் மூலம் தொங்கிக்கொண்டிருக்கிறது இந்த விடுதி.

இரவில் சுவையான உணவை உண்டுவிட்டு நிம்மதியாகத் தூங்கி எழுந்தால், அதிகாலை மிக அற்புதமான இயற்கை எழிலைக் கண்டு களிக்க முடியும். சாகசப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்குப் போட்டி வைத்து, அதில் வெற்றி பெற்றவர்களை இங்கே தங்க அனுமதிக்கிறார்கள்.

சாதாரணமானவர்கள் கீழே பார்த்தால் மயங்கி விழுந்துடுவாங்க!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x